Close

TAMCO – Meeting

Publish Date : 05/10/2024
.

செ.வெ.எண்:-04/2024

நாள்: 03.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) கடன் திட்டங்கள் தொடர்பாக டாம்கோ தலைவர் திரு.சி.பெர்னாண்டஸ் இரத்தின ராஜா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) கடன் திட்டங்கள் தொடர்பாக டாம்கோ தலைவர் திரு.சி.பெர்னாண்டஸ் இரத்தின ராஜா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடன் இன்று(03.10.2024) ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) தலைவர் திரு.சி.பெர்னாண்டஸ் இரத்தின ராஜா அவர்கள் தெரிவித்ததாவது;-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அந்த திட்டங்களின் பயன்கள் அடித்தட்டு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான சான்றிதழ்கள் பெறுவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடக்க தலங்கள் என்பது பொதுமக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். அடக்க தலங்கள் அமைக்க புதியதாக இடம் வாங்குவதற்கு தமிழக அரசில் திட்டம் உள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்த மதவழி சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) மூலம் தனிநபர் கடன் திட்டம், விசாரத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்), சுய உதவி (ஆண்/பெண்) குழுக்களுக்கான சிறுகடன் திட்டம், கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் வழங்கப்படுகிறது.

விசாரத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்கள், உபகரணங்கள், இயந்திரங்கள் வாங்குதவற்காக இக்கடன் வழங்கப்படுகிறது.

சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுகடன் திட்டத்தின் கீழ், சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, தனித்தனியே அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம், சிறு தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வகையில் அவர்களது குழுக்களுக்கு காய்கனி கடை, மீன் வியாபாரம், பூ வியாபாரம், பலாகாரக்கடை போன்ற சிறுவணிகம் நடத்த கடன் வழங்கப்படுகிறது.

கல்விக்கடன் திட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு, பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் திட்டங்களின் கீழ் பயனடைய விரும்புபவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த கடன்தொகை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து, கடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022-ஆம் நிதியாண்டில் கடன் தொகை இலக்கு ரூ.830.00 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டதில் 424 பயனாளிகளுக்கு ரூ.295.52 இலட்சம் கடனுதவியும், 2022-2023-ஆம் நிதியாண்டில் கடன் தொகை இலக்கு ரூ.800.00 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டதில் 824 பயனாளிகளுக்கு ரூ.490.72 இலட்சம் கடனுதவியும், 2023-2024-ஆம் நிதியாண்டில் கடன் தொகை இலக்கு ரூ.460.00 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டதில் 1241 பயனாளிகளுக்கு ரூ.813.90 இலட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2024-2025-ஆம் நிதியாண்டிற்கு பொதுக்கால கடன் தொகை ரூ.200.00 இலட்சம், கைவினைஞர் கடன் தொகை ரூ.5.00 இலட்சம், சிறுகுறு தொழில் கடன் தொகை ரூ.590.00 இலட்சம், கல்விக் கடன் தொகை ரூ.5.00 இலட்சம் என மொத்தம் ரூ.800.00 இலட்சம் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை(09.08.2024) 50 பயனாளிகளுக்கு ரூ.37.20 இலட்சம் மதிப்பீட்டிலான கடன்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகல் நகர் கூட்டுறவு வங்கி மூலம் என்யுஎல்எம் முல்லைக்கொடி மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.5.50 இலட்சம், சின்னாளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மெசியா மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.14.00 இலட்சம், மரியா மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.6.00 இலட்சம், டி.கொசவப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பூண்டி மாதா மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.11.70 இலட்சம் கடனுதவிகள் என 50 பயனாளிகளுக்கு ரூ.37.20 இலட்சம் மதிப்பீட்டிலான கடன்தொகை இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திருமதி சுபாஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி, துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரி சுவி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.