Tamilvalarchi Rally
செ.வெ.எண்:-63/2024
நாள்:-24.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணையின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 18.12.2024 முதல் 27.12.2024 வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் ஒருநாள் நிகழ்வாக ஆட்சிமொழிச்சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி, திண்டுக்கல்லில் இன்று(24.12.2024) நடைபெற்றது. பேரணியை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு. இரா.சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி ஜ.சபீர்பானு மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.