Close

Tamilvalarchi-Tamilsemmal Award

Publish Date : 18/07/2024

செ.வெ.எண்:-46/2024

நாள்:-16.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித் துறையால் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்” விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.25,000 மற்றும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchiturai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விபரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அது தொடர்பான விபரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம், ஆற்றிய தமிழ் பணிக்கான 2 நிழற்படங்கள் சான்றுகள், வட்டாட்சியரால் வழங்கப்படும் குடியிருப்பு சான்றிதழ் நகல் அல்லது ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 12.08.2024-ஆம் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ”தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்” என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்(0451-2461585) வாயிலாகவோ தொடர்புகொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.