Close

TAPSETCO & TAMCO Loan Scheme – Meeting

Publish Date : 05/08/2024
.

செ.வெ.எண்:-02/2024

நாள்:-01.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

கடன் திட்டங்களை செயல்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(01.08.2024) நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில், டாப்செட்கோ கடன் திட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் (2023-2024) திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.400 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இலக்கினை காட்டிலும் கூடுதலாக ரூ.389.034 இலட்சம் கடன் முன் மொழிவுகள் என மொத்தம் ரூ.789.034 இலட்சம் மதிப்பீட்டிலான கடன் முன்மொழிவுகள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, 197 சதவீதம் இலக்கு எய்தப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில்(2024-2025) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் டாம்கோ கடன் திட்டத்திற்கு, பொதுக்கடன் தொகை ரூ.25.00 இலட்சம் மற்றும் குழுக்கடன் தொகை ரூ.3.06 கோடி என மொத்தம் ரூ.3.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், டாம்கோ கடன் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் (2023-2024) ரூ.800 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இலக்கினை காட்டிலும் கூடுதலாக ரூ.13.90 இலட்சம் கடன் முன் மொழிவுகள் என மொத்தம் ரூ.813.90 இலட்சம் மதிப்பீட்டிலான முன்மொழிவுகள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, 101.74 சதவீதம் இலக்கு எய்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் (2024-2025) தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் டாம்கோ கடன் திட்டத்திற்கு, பொதுக்கடனாக ரூ.2.00 கோடி, கைவினைஞர் கடனாக ரூ.5.00 இலட்சம், குழுக்கடனாக ரூ.5.90 கோடி, கல்விக்கடனாக ரூ.5.00 இலட்சம் என மொத்தம் ரூ.8.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தால் 22.07.2024 முதல் 26.07.2024 வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் கடன் மேளா நடத்தப்பட்டு, டாப்செட்கோ கடன் திட்டத்தில் 350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் டாம்கோ கடன் திட்டத்தில் ரூ.97.80 இலட்சம் தனிநபர் கடன் வேண்டி 102 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 29.07.2024 அன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் மூலம் ரூ.42.00 இலட்சம் தனிநபர் கடன் வேண்டிய 84 விண்ணப்பங்கள், இரண்டு மகளிர் குழுக்களுக்கு ரூ.20.00 இலட்சம் என மொத்தம் ரூ.62.00 இலட்சம் மதிப்பிலான கடன் விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 30.07.2024 அன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டாப்செட்கோ கடன் திட்டத்தில் தனிநபர் கடனாக அதிகபட்சம் ரூ.15.00 இலட்சம், குழுக்கடனாக ரூ.15.00 வரையிலும், டாம்கோ கடன் திட்டத்தில் தனிநபர் கடனாக அதிகபட்சம் ரூ.30.00 இலட்சம், குழுக்கடனாக ரூ.20.00 இலட்சம் வரையிலும் கடன் தொகை வழங்கப்படுகிறது.

இந்த 2 திட்டங்கள் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு கடன் வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக வரும் 16.08.2024 அன்று திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிச்சாண்டி மஹால், 20.08.2024 அன்று பேகம்பூர் முகமதியாபுரம் ஈதுகா மஹால் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களை வழங்கி, கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி, கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர்கள் திரு.ஆல்பர்ட் பெர்னால்டு, டாக்டர் பீர்முகமது மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.