TH RD minister-Ungaludan Stalin -Kannivadi TP
செ.வெ.எண்:-108/2025
நாள்: 31.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், கன்னிவாடி பேரூராட்சி மற்றும் தேவரப்பன்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து
கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், தேவரப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று(31.07.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டு கன்னிவாடியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லுாரிக்கு சொந்தக் கட்டடம் ரெட்டியார்சத்திரத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கல்லுாரி இன்னும் ஒரு சில மாதங்களில் சொந்தக் கட்டடத்தில் செயல்படும். மேலும், ஆத்துாரில் கூட்டுறவுத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கும் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
ஆத்துார் பகுதி மாணவ, மாணவிகளின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கல்லுாரிகளை தொடங்கி மக்களின் எண்ணங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.
கன்னிவாடியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் முதல் மூலசத்திரம் வரை இருபுற வழி சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. நாயோடையை ஆழப்படுத்தவும், அகலப்படுத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தற்போது ரெட்டியார்சத்திரத்தில் உள்ள அனைத்து கிராம குளங்களுக்கும் சிமெண்ட் வாய்கால் அமைத்து, குளங்களை தூர்வாரி, மழை காலங்களில் வருகின்ற மழைநீரை சேமிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தற்போது பணிகள் நடைபெற்று கொண்டியிருக்கிறது. இதனால் இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயிகளின் விவசாய பணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 1.60 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுவில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் விடுபட்டு போன தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மேலும். இம்முகாமில் மனு அளிக்கும் 60 வயதினை தாண்டியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.5.00 இலட்சம் சிகிச்சை மேற்கொள்ளலாம். உங்கள் மனுவினை முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைத்தால் ரூ.30 இலட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். எனவே, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான தொகை அரசு வழங்கும்.
அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இன்றைய முகாமில் கன்னிவாடியில் பெறப்பட்ட மனுக்களில் உடனடி தீர்வு காணப்பட்ட வகையில் ஒரு பயனாளிக்கு மின் இணைப்புக்கான அனுமதி மற்றும் தேவரப்பன்பட்டியில் பிறப்புச்சான்று 4 பயனாளிகளுக்கும். சாதிசிசான்று 2 பயனாளிகளுக்கும், மின் இணைப்பு பெயர் மாற்றம் 3 பயனாளிகளுக்கும், வருமான சான்று 3 பயனாளிகளுக்கும், மருத்துவக் காப்பீடு அட்டை 7 பயனாளிகளுக்கும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ஆர்.இராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.