Close

The Hon’ble CM- VC- The Hon’ble Food and Civil Supply Minister -School Building

Publish Date : 22/07/2024
.

செ.வெ.எண்:-51/2024

நாள்: 19.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மாணவ, மாணவிகள் வானலாவிய எண்ணங்களுடன், உயர்ந்த லட்சியத்துடன் கல்வி பயில வேண்டும், என தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து இன்று(19.07.2024) பள்ளிக் கல்வித் துறை சார்பில் 264 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை குத்துவிளக்கேற்றி, மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

இந்த விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.44,044 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவிலான மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். மருத்துவம், தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.264.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்களை, சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து இன்று(19.07.2024) திறந்து வைத்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி தலா 6 வகுப்பறைகள் கொண்டு இரண்டு கட்டடங்கள் மற்றும் நாகையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, கே.அணைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலா 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் ஆகியவை தலா ரூ.1.28 கோடி மதிப்பீட்டிலும், அழகாபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 பகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.42.72 இலட்சம் மதிப்பீட்டிலும், விராலிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.1.84 கோடி மதிப்பீட்டிலும், கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.33.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.8.78 கோடி மதிப்பீட்டிலான வகுப்பறை கட்டடங்கள் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 7 கல்லுாரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித்துறை சார்பில் கள்ளிமந்தையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அம்பிளிக்கையில் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பழனியில் சித்தா மருத்துவக் கல்லுாரி, கொடைக்கானலில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கல்லுாரி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. விருப்பாட்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூ.7.00 கோடியில் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த படித்த ஏராளமான இளைஞர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள, இளைஞர்களின் அரசுப் பணி என்ற உயரிய இலட்சியக் கனவினை நினைவாக்கிடும் வகையிலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் நகரம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு தகுதியுடனும் அதிகமானோர் பங்கேற்றிட வழிகாட்டிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது.

மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நடப்பு நிதியாண்டில் 22 இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதில், ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு மைதானம் அமைக்கப்படவுள்ளன.

அனைத்து மாணவர்களும் எந்த காரணத்தை கொண்டும் கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதில் தமிழக அரசு மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி கற்றிட வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டம் மூலம் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18.50 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர். இத்திட்டம் தற்போது, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டத்தின் மூலம் மொத்தம் 20.73 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வாரம் 5 முட்டைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநிலம், வெளிநாட்டு மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு “புதுமைப்பெண்“ திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் “தமிழ் புதல்வன்“ திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

மாணவ, மாணவிகள் வானலாவிய எண்ணங்களுடன், உயர்ந்த லட்சியத்துடன் கல்வி பயில வேண்டும். கல்விச் செல்வம் மிகவும் சிறந்த செல்வம். இந்த செல்வத்தை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பெற்று, உயர்கல்வி பயின்று, சமூகத்ததிற்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திரு.திருமலைச்சாமி, நகராட்சி ஆணையாளர் திரு.ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர் திரு.கண்ணன், உதவிப்பொறியாளர்கள் திரு.ராஜமோகன், திரு.சுப்பிரமணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.