The Hon’ble ADW ministers-World Tribal Day
செ.வெ.எண்:-41/2025
நாள்: 09.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன் அவர்கள், திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் 2 நாட்கள் நடைபெறும் உலக பழங்குடியினர் தின விழாவை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மரு. மா.மதிவேந்தன் அவர்கள், திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் 2 நாட்கள் நடைபெறும் உலக பழங்குடியினர் தின விழாவை இன்று(09.08.2025) தொடங்கி வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் திருமதி ஆர்.உமாமகேஸ்வரி, இ.பா.த.கு.ப., அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரையாற்றினார். பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.ச.அண்ணாதுரை, ம.தொ.ப. அவர்கள் திட்டவிளக்கவுரையாற்றினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், மாநில பழங்குடியினர் நல வாரிய தலைவர் திருமதி கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழங்குடியின மக்களின் மொழி, பண்பாடு, வாழ்வியல், வாழ்வாதார உரிமைகள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ம் தேதியை உலக பழங்குடிகள் தினமாகக் கொண்டாடி வருகிறது.
இதை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை, நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அரசு அருங்காட்சியகம் துறை மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல், எம் வி முத்தையா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல், சமூக நீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப் பணி கல்லூரி ஆகியவை இணைந்து உலக பழங்குடிகள் தின விழா, திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று(09.08.2025) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவில், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மரு. மா.மதிவேந்தன் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் தனி கவனம் செலுத்தி வருகிறார். பழங்குடியின மக்களின் கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு துறை ரீதியாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால் கடந்த ஆண்டு தொல்குடி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஓராண்டுக்கு ரூ.500 கோடி வீதம் மொத்தம் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பழங்குடியினர் சமூகம், கல்வி, கலாச்சாரம், பொருளாதார மேம்பாடு அடைச்செய்வதாகும். மேலும், பழங்குடியினரின் வாழ்விடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் மற்றும் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொல்குடி மேலாண்மை திட்டம் மூலம் பழங்குடியின மக்களின் வேளாண்மை பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக உருவாக்கி சந்தை படுத்துவதற்கான நடைமுறைகளையும் மேற்கொண்டு அவர்களின் வாழ்வாராத்தினையும் மேம்படுத்தி வருகிறது.
விவசாய தொழிலாளர்களுக்காக நன்னிலம் நில உடமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்வியல், அவர்களை பற்றிய ஆய்வு மேற்கொள்ள தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 31-ம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் ஐஐடி, என்ஐடி (IIT, NIT) போன்ற இந்தியாவின் புகழ் பெற்ற நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பினை பெற்ற சுமார் 135 மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்தாண்டு உலக பழங்குடியினர் தினத்தின் கருப்பொருளாக ஜக்கிய நாடுகளின் சபையின் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி எவ்வாறு பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் எதிர்காலத்தை தீர்மானிப்பது என்பதை மையப்படுத்தி செயல்பட கணித்துள்ளது.
தொல்பொருள் திட்டத்தின் கீழ், பழங்குடியினர் மொழி மற்றும் பண்பாடுகளை இணைய வழியில் பாதுகாக்க 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக சுமார் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு இணைய முறையில் ஆவணப்படுத்தப்பட்டதுதான் tholporul.in என்ற மின்னனு களஞ்சியம் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு இணைய வழி கொண்டு வரப்பட்டுள்ளது.
எல்லாருக்கும் எல்லாம் என்ற சமூகநீதி கோட்பாட்டின்படி, பழங்குடியின மக்களின் மொழி, கலச்சாரம் மற்றும் பண்பாடுகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல ஒரு ஆய்வு பெட்டகமாக இந்த இணையம் செயல்படும். காலநிலை மாற்றங்களையும், அதனால் ஏற்படும் வாய்ப்புகளையும் நேரடியாக நாம் உணரும் இக்காலகட்டத்தில் இயற்கையோடு இணைய பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறையை பாதுகாப்பதன் மூலம் நாம் இயற்கை சூழலையும், அதன் மூலம் பூமி தாயை பாதுகாப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கனிசமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகிய இரண்டு மூத்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பழங்குடியின மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளார்கள். பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நானும் துறைசார்ந்த அலுவலர்களும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம், என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மரு. மா.மதிவேந்தன் அவர்கள் பேசினார்.
விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற உன்னதமான நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், உலக பழங்குடியினர் தினவிழா-2025 இன்று கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகைதந்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வி, மருத்துவம், தொழில், ஆதிதிராவிடர் நலத்துறை என ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அரசின் திட்டங்கள பழங்குடியினர் வசிக்கும் மலைக்கிராமங்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோராக்கும் வகையில் தொழில் தொடங்குவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஆயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை, குடிநீர், கழிப்பறை, வீடுகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி வழங்கப்பட்டு வருகிறமு.
மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குடியிருக்க பாதுகாப்பான வீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 6,200 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டன. நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 4,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆலோசனையின் பேரில், அரசின் திட்டங்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே ரேஷன் பொருட்களை கொண்டு சென்று வழங்கும் திட்டம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 42 விடுதிகள் உள்ளன. அதில் 3,800 பேர் தங்குவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதலா 5 விடுதிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பளியர் பழங்குடியின மக்களுக்கு 150 வீடுகள் வழங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.
இந்த இரண்டு நாட்களில், பழங்குடியினர்களுக்காக ஆவணப்படம் திரையிடல், பழங்குடியின மக்களின் பண்பாடுகள் மற்றும் வாழ்நிலைகள் குறித்தான கருத்தரங்க அமர்வு, பழங்குடியின மக்களின் வாழ்வியல் பகிர்வு அமர்வு, பழங்குடியின மக்களுக்கான தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் “தொல்குடி” திட்டத்திற்கான மொழி ஆவணப்படுத்தல் குறித்த பழங்குடியின மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை, பழங்குடியினர் மக்களின் உணவு பொருள்கள், கைவினை பொருள்கள் விற்பனை செய்தல், மற்றும் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்படவுள்ளன.
விழாவில், சென்னை சமூகநீதி மற்றும் சமத்துவ மையம், சமூகப்பணி கல்லுாரி இயக்குநர் முனைவர் இரா.பவணந்தி, மதுரை மற்றும் தேனி அரசு அருக்காட்சியம் காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராசப்பா, எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லுாரி முதல்வர் முனைவர் க.லட்சுமி, பழங்குடியினர் மக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.