The Hon’ble CM -VC-Rural Development Minister-Muthalvar Marunthagam-Kannivadi
செ.வெ.எண்:-69/2025
நாள்:-24.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை, சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(24.02.2025) திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் உயிர்காக்கும் மருந்துகள், மிகப் பயனுள்ள மருந்துகள் மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் கூட்டுறவுத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 1000 “முதல்வர் மருந்தகங்கள்“ இன்று திறந்து வைத்துள்ளார்கள்.
முதல்வர் மருந்தகங்களுக்கான மருந்துகள் கொள்முதல் என்பது மருந்துகள் உற்பத்தி செய்கின்ற இடத்திலேயே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, இடையீட்டாளர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யப்படுவதால் இந்த அளவிற்கு குறைந்த விலையில் மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. சத்து மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளை இந்த முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் வாங்கி பயன்பெறலாம். வருமுன் காப்போம் என்பதில் பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு உள்ளது. எனவே, அவர்களாகவே சில மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவர் ஆலோசனையின்பேரில் பயன்படுத்தப்படும் சில உயிர்காக்கும் மருந்துகள் மட்டும் மருத்துவர் சீட்டு இருந்தால் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். கூட்டுறவுத்துறையில் பொருட்கள் தரமாக இருப்பதுடன், விலை குறைவாகவும் இருக்கிறது. எனவே, பொதுமக்கள் நம்பி பொருட்களை வாங்கி வருகின்றனர்.
“விடியல் பயணம்“ திட்டத்தில் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதன் மூலம் வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ரூ.1000 போக்குவரத்து செலவு குறைந்து, சேமிப்பு ஏற்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 100 நாள் வேலை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வசதியாக பணித்தள பொறுப்பாளர் விதிமுறைகளுக்குட்பட்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருகின்றனர். வேலை செய்பவர்களுக்கான சம்பளம் அவரவர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் பணிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதி ஒவ்வொரு முறையும் குறைக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார்.
தமிழ்நாட்டில் வீடு இல்லாதவர்களே இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில், அனைவரும் பாதுகாப்பாக வசிக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கி, ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 6,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தில் ஒரு இலட்சம் பழுதடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டை சீரமைக்க ரூ.1.50 இலட்சம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
விழாவில், கன்னிவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.32.38 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 5 நபர்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800 மதிப்பீட்டில் ரூ.34.61 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 43 பயனாளிகளுக்கு ரூ.71.99 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவார் திரு.சி.குருமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திருமதி சுபாஷினி, வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.