Close

The Hon’ble CM VC – The Hon’ble Rural Development minister -Ottachathai Uruthi sei -scheme

Publish Date : 18/11/2024
.

செ.வெ.எண்:-31/2024

நாள்:-15.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “ஊட்டச்சத்தை உறுதி செய்“ திட்டத்தின் இரண்டாம் தொகுப்பை அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தம் அங்கன்வாடி மையத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஊட்டச்சத்து பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “ஊட்டச்சத்தை உறுதி செய்“ திட்டத்தின் இரண்டாம் தொகுப்பை அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் இன்று(15.11.2024) தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், பிள்ளையார்நத்தம் அங்கன்வாடி மையத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் “ஊட்டச்சத்தை உறுதி செய்“ திட்டத்தின் ஊட்டச்சத்து பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், சத்துணவு திட்டத்தில் முட்டைகள் வழங்கும் செயல்பாட்டை தொடங்கி மதிய உணவில் ஊட்டச்சத்து நிலையை ஏற்படுத்தியவர். அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும், குழந்தைகள் ஆரோக்கியத்துடனும், சுகாதாரத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காகவும், பெண்கள், கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 0-6 வயது வரை குழந்தைகளில் பலரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமும் அறிவித்து “ஊட்டச்சத்தை உறுதி செய்“ என்னும் இந்த திட்டத்தின் செயல்பாடுககளை 29.06.2022 அன்று தொடங்கி வைத்தார்கள்.

இவ்வாறு அரசின் முதற்கட்ட தீவிர முன்னெடுத்தல் காரணமாக 0-6 வயதுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோகியம் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 சதவீதம் குழந்தைகள் இயப்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இது அரசின் மிகப்பெரும் சாதனையாகும்.

இதனைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக “ஊட்டச்சத்தை உறுதி செய்“ திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று(15:11.2024) அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள். 0-6 மாத குழந்தைகளுக்கு திட உணவு வேறு ஏதுமின்றி தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுவதால் ஆரோக்கியத்தை பேணுவது அத்தியாவசியமாகிறது. 0-6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையின்படி, மாநிலம் முழுவதும் 16,215 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும், 50,490 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டிலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 915 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும், 1890 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டிலும் என மொத்தம் 2,805 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பெட்டகத்திலும் நெய் 500 மிலி, உலர் பேரீச்சம்பழம் ஒரு கி.கிராம், ஊட்டச்சத்து பவுடர் ஒரு கி.கிராம், இரும்புச்சத்து திரவம் 2 பாடடில்கள், பிளாஸ்டிக் கோப்பை 1, காட்டன் துண்டு 1, பிளாஸ்டிக் கூடை 1 ஆகியவை அடங்கியுள்ளன.

குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பறியது. அதிலும் தாயின் உடல் நலனை காப்பது இன்றியமையாதது. குழந்தை கருவில் உருவான நாள் முதற்கொண்டு அருகிலுள்ள குழந்தைகள் மையங்களில் பதிவு செய்து அங்கு அளிக்கப்பட்டு வரும் சேவைகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர்கள் ஊட்டச்சத்து பெட்டகத்தின் பயன்பாடு மற்றும் பயனாளிகளின் ஆரோக்கிய நிலையினை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்வார்கள். மருத்துவ உதவிகள் தேவைப்படின் ஆர்பிஎஸ்கே (RBSK) மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ள ஏதுவாக அங்கன்வாடி பணியாளரின் இந்த தொடர் கண்காணிப்புகள் உதவிபுரியும். எனவே, வலிமையான குழந்தைகளை வளர்க்க கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை காப்போம். ஒளிமயமாக்குவோம், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

விழாவில், சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் திருமதி கர்லின் செல்வ ராணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.