The Hon’ble CM VC-Ungaludan Stalin-The Hon’ble Rural Development Minister Meeting
செ.வெ.எண்: 55/2025
நாள்: 15.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல்லில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை இன்று(15.07.2025) கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் தரகு மண்டி குமாஸ்தாக்கள் சங்கம் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற மனுக்கள் பெறும் முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, ஆத்துார் சட்டமன்ற தொகுதி, அக்கரைப்பட்டியில் நடைபெற்ற மனுக்கள் பெறும் முகாமில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் 5 பவுன் வரை தள்ளுபடி செய்யப்பட்டன. மகளிர் சுயஉதவிக்குழு கடன் சுமார் 2,700 கோடி தள்ளுபடி செய்யப்பட்டன. விவசாயிகள் கடன் சுமார் ரூ.12,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டன.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 4 இலட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டதில், சுமார் 80,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் ஏராளமான வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி மாணவர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதேபோல், 100 நாள் வேலை திட்டத்தில் ஒன்றிய அரசிடமிருந்து நிதி கிடைக்காதபோதிலும், மாநில அரசின் நிதியிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, அவர்கள் பாதுகாப்பாக வசிப்பதற்காக வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், துணை மேயர் திரு.ச.ராஜப்பா, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.ம.செந்தில்முருகன், உதவி இயக்குநர்(நிலஅளவைத்துறை) திரு.சிவக்குமார், வட்டாட்சியர்கள் திண்டுக்கல் மேற்கு திரு.ஜெயபிரகாஷ், ஆத்துார் திரு.முத்துமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.