The Hon’ble Food and Civil Supply Minister – Bus

செ.வெ.எண்:-61/2025
நாள்:-22.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 5 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 5 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொப்பம்பட்டி அருகே பொருளூரில் இன்று(22.03.2025) தொடங்கி வைத்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் – வாடிப்பட்டி, ஒட்டன்சத்திரம் – தேவத்தூர், ஒட்டன்சத்திரம் – மோதுபட்டி, பழனி – சாலக்கடை, பழனி – கொத்தையம் ஆகிய வழித்தடங்களில் புதிய நகர பேருந்துகள் இயக்கத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த குழுவினர்களுக்கு 5 பவுனுக்கு கீழ் நகை கடன் தள்ளுபடி மற்றும் கூட்டுறவு வங்கியில் பெண்கள் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமிழ்நாட்டை குடிசையில்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதில் முதற்கட்டமாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 2.50 இலட்சம் பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் மேலும் ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட கப்பல்பட்டி கரும்பிற்கு புவிசார் குறியீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 2.25 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன.
விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டதில், இதுவரை 1.70 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
அனைத்து ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1400 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் ஒட்டன்சத்திரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
கிராம சாலைகள் மேம்படுத்தும் பணிகள், தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் திரு.ராஜாமணி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.