Close

The Hon’ble Food and Civil Supply Minister – English Day – Thoppampatti

Publish Date : 08/02/2025
.

செ.வெ.எண்:-11/2025

நாள்:-07.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆங்கில நாள் விழாவில் கலந்துகொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று(07.02.2025) நடைபெற்ற ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆங்கில நாள் விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் ஆங்கிலத்திறனை பார்வையிட்டார்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ரூ.44,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும், பேராசியர் அன்பழகன் பெயரில் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிகளில் கட்டடங்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதவிர நபார்டு திட்டம் வாயிலாகவும் பள்ளிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 34,987 பள்ளிகளில் பயிலும் சுமார் 20.73 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சத்துணவுடன் வாரம் 5 முட்டைகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அந்த வகையில், மாண்வுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வியில்) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 4.25 இலட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 3.28 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இடைநின்ற 57.53 இலட்சம் மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை, சட்டம் போன்ற உயர் கல்வி படிப்புகளில் சேருவதற்காக அவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 3.5 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 22 சிறு விளையாட்டு மைதானங்கள் அமைக்க அறிவிக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆத்துார் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி ஆகியற்றிற்கு தலா ஒரு சிறு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க ஏற்கனவே அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நுாலகம் இருக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணாத்துரை அவர்கள் சொன்னார்கள். அதன்படி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 2006-11-ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நுாலகம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த நுாலகங்கள் மறு சீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், 2006-11-ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் பேரறிஞர் அண்ணாத்துரை அவர்கள் பெயரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நுாலகத்தை அமைத்தார். தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மதுரையில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தை மதுரையில் அமைத்துள்ளார். மேலும், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் நுாலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்திலும் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கல்லூரியும், ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறையின் சார்பில் கல்லூரியும், களஞ்சியத்தில் உயர்கல்வித்துறையின் சார்பில் கல்லூரியும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அம்பிளிக்கையில் கல்லூரியும், ஒட்டன்சத்திரத்தில் தொழில்நுட்ப பயிற்சி நிலையமும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

படித்த இளைஞர்களை போட்டித்தேர்வுக்கு தயார்படுத்திடும் வகையில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் காளாஞ்சிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் 10 பேர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு தொகுதி 4-ல் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தொகுதி 2-ல் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிள்ளனர்.

தமிழ்நாட்டில் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மாணவ, மாணவிகள் இதுபோன்ற பயிற்சிகளை நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவிகளை அடைய வேண்டும். மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் எதிலும் சாதிக்கலாம்.

முன்பெல்லாம் அரசு பள்ளி மற்றும் கிராமப்புறங்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்து கல்லுாரிகளில் சேரும் மாணவ, மாணவிகள் அங்கு ஆங்கில வழிக்கல்வியில் தங்களை தயார்படுத்திக்கொள்ள சுமார் 4 மாதங்களுக்கு மேல் ஆகும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என 36 பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் மூலம் ஆண்டுதோறும் 6000 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். சிறந்த விளையாட்டு வீரர்கள் 84 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் நமது பகுதியை சேர்ந்த 5 பேருக்கு அரசு பணி வாய்ப்பு கிடைத்துள்ளது.

“மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்“ என்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வாக்குப்படி, மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடையக்கோட்டையில் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். காலியிடங்களில் மரங்கள் வளர்க்க வேண்டும். நமது வருங்கால சந்ததியினர் சுகாதாரமான காற்றை சுவாசிக்க நாம் மரங்களை வளர்க்க வேண்டும். என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

நான் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கலந்துகொள்ளும் முதல் அரசு நிகழ்ச்சி இது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்தும் வகையில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது சிறந்த முன்னெடுப்பான செயலாகும். இதன்மூலம் ஆண்டுதோறும் 6000 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

நான் அரசுப் பள்ளி மாணவன். தமிழ் வழிக்கல்வியில் படித்தவன். பொதுவாக அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில வழிக்கல்வி பயிலுவதிலும், மற்ற ஆங்கில வழிக்கல்வியில் பயின்று வந்த மாணவர்களுடன் பழகுவதிலும் சற்று தயக்கம் இருக்கும். அந்த தயக்கத்தை உடைக்க இந்த ஆங்கில பேச்சு பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த முயற்சி பாராட்டத்தக்கது. தமிழ்மொழி நமக்கு மிகவும் முக்கியம். தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்பும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் உயர்கல்வி, வெளிநாடுகளில் பணி வாய்ப்பு பெறும்போது ஆங்கில மொழி தேவையான ஒன்றாக உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள், வீடால்க் பயிற்சி ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி பரிமளா, ஒட்டன்சத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.ராஜாமணி, கீரனுார் பேரூராட்சித் தலைவர் திரு.கருப்பசாமி, முக்கிய பிரமுகர்கள் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், திரு.கா.பொன்ராஜ், திரு.சுப்பிரமணியன், திரு.பி.சி.தங்கம், தலைமையாசிரியர் திரு.செந்தில்ராஜா, வீடால்க் ஒருங்கிணைப்பாளர் திரு.யாசர் அராபத், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.