Close

The Hon’ble Food and Civil Supply Minister-Inspection- Ration shop

Publish Date : 24/07/2024

செ.வெ.எண்:-61/2024

நாள்:-23.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அத்திமரத்துவலசு நியாயவிலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதை பொதுமக்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அத்திமரத்துவலசு கிராமத்தில் இன்று(23.07.2024) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களிடம், அந்தப்பகுதியைச் சேர்ந்த பெண், நியாயவிலைக்கடையில் பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கான பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என புகார் தெரிவித்தார்.

உடனே, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், அந்த பெண்ணை உடன் அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட அத்திமரத்துவலசு நியாயவிலைக்கடைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் இருப்பு, பொருட்கள் விநியோக பதிவேடு, பொருட்களின் தரம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, அந்த நியாயவிலைக்கடையில் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதை பொதுமக்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், அங்கிருந்த பொதுமக்களிடம் நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகம் குறித்து கேட்டபோது, தங்களுக்கு பொதுவிநியோகத் திட்டத்தில் நியாயவிலைக்கடை மூலம் தரமான பொருட்கள், குறித்த நேரத்தில் முறையாக வழங்கப்படுகிறது, என தெரிவித்தனர்.

உடனே புகார் தெரிவித்த பெண், மழுப்பலாக பேசிக்கொண்டே, அங்கிருந்து நழுவிச்சென்றார்.

இந்த ஆய்வின்போது, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.