The Hon’ble Food and Civil Supply Minister (Kalanjipatty)

செ.வெ.எண்:-31/2025
நாள்:-11.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் காளாஞ்சிப்பட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைப்பு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிலக்கூடிய தேர்வர்களுடன் கலந்துரையாடினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காளாஞ்சிப்பட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைப்பு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிலக்கூடிய தேர்வர்களுடன் இன்று(11.04.2025) கலந்துரையாடினார்.
இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காஞாஞ்சிப்பட்டியில் ரூ.10.81 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 27.02.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி -2 மற்றும் தொகுதி – 4 ஆகிய தேர்வுகளுக்கு இலவசப்பயிற்சி 22.03.2024 முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இம்மையத்தில் சுமார் 500 நபர்கள் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட ஒலியியல் வசதிகளுடன் கூடிய நவீன கருத்தரங்கு கூடம், பொது நூலகம், இரண்டு வகுப்பறைகள், கணினி வழி பயிற்சிக்கூடம், இணைய வழி நூலகம், பயிற்றுநர் அரங்கம், அலுவலகம், உணவருந்தும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வாகனஙகள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் உள்ளன.
இப்பயிற்சி மையத்தில் இதுவரை சுமார் 500-க்கும் மேற்பாட்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி-2 மற்றும் தொகுதி-4 ஆகிய தேர்வுகளுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இலவச பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி-1 முதனிலைத் தேர்வில் 2 நபர்களும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி -2 முதனிலைத் தேர்வில் 15 நபர்களும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி-4 தேர்வில் 7 நபர்களும் இது வரை வெற்றி பெற்றுள்ளார்கள்.
இங்கு சிறப்புற இம்மையத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நமது பகுதியை சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் மற்றும் இந்திய காவல்பணி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மத்திய அரசு பணிகளில் உள்ள பல்வேறு உயர் அலுவலர்கள் மூலம் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள திறன் பயிற்சியாளர்களை கொண்டு வீடியோ கான்பிரன்ஸ் முறையிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் மூலம் இப்பகுதியில் உள்ள அதிக அளவில் உயர்கல்வி பயின்றுள்ள மாணவ, மாணவியர்கள் உயர் பதவிகளை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மையத்தில் படிக்ககூடிய மாணவ, மாணவியர்கள் விடாமுயற்சி, கடின உழைப்பு இவற்றை கடைபிடித்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இப்பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அதிக மாணவர்கள் அரசு பணியில் சேர வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இப்பயிற்சி மையத்தில் படித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் இந்த சமுதாயத்திற்கு நல்ல முறையில் சேவை செய்து பெருமை அடைய வேண்டும். அனைவரும் நல்ல முறையில் படித்து அனைத்து போட்டி தேர்விலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டம் (இயக்குநர் போட்டி தேர்வு) திரு.சுதாகரன், செயற்பொறியாளர் கட்டடம் (ம) பராமரிப்பு திரு.எஸ்.தங்கவேல், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், திரு.செந்தமிழ் செல்வன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபு பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.