The Hon’ble Food and Civil Supply minister-NKS-schemes
செ.வெ.எண்:-42/2025
நாள்: 09.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
தொடர்ந்து அத்திக்கோம்பை மற்றும் லெக்கையன்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை இன்று(09.08.2025) தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அத்திக்கோம்பை மற்றும் லெக்கையன் கோட்டை ஆகிய ஊராட்சிகளில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, அத்திக்கோம்பை ஊராட்சியில் முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குமரவேல் தோட்டம் முதல் தங்கவேல் கருப்பணன் தோட்டம் வரை ரூ.25.46 இலட்சம் மதிப்பீட்டிலும், அண்ணாநகர் – தெற்கு மலை அடிவாரம் சாலை ரூ.98.01 இலட்சம் மதிப்பீட்டிலும், கண்ணப்பன் நகர் ராஜ்குமார் தோட்டம் முதல் கோம்பை மலை அடிவாரம் வரை எஸ்ஏஎஸ்சிஐ திட்டத்தில் ரூ.80.72 இலட்சம் மதிப்பீட்டிலும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அத்திக்கோம்பை மற்றும் லெக்கையன்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கலையரங்கங்கள் என மொத்தம் ரூ.2.24 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெறுப்பேற்ற பின்பு தேர்தல் சமயத்தில் சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல் சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 02.08.2025 அன்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார்கள்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, வரும் முன் காப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நோய் வருவதற்கு முன்பாக அவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனை, இசிஜி, சக்கரை பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் இம்முகாமில் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்த முகாமிலேயே மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 45 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொறுப்பெற்ற பின்னர் ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
பழனியில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் வர இருக்கிறது. இதுபோல் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீட்டிற்கே வந்து மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அரசு அங்கிகரிக்கப்பட்ட 480 தனியார் மருத்துவமனைகள், 250 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 730 மருத்துவமனைகளிலும், விபத்தில் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால் 48 மணி நேரத்திற்கு ஏற்படும் மருத்துவ சிகிச்சைக்கான செலவினை ரூ.2.00 இலட்சம் வரை அரசு ஏற்றுக்கொள்ளும். இதுபோல் சுகாதாரத்துறைக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சென்று பரிசோதனை செய்யும் நடமாடும் மருத்துவக்குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி, முத்துலெட்சுமி ரெட்டி நிதியுதவி, ஊட்டச்சத்து பெட்டகம், இரும்பு சத்து மாத்திரை. வளர் இளம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் இரத்த சோகை கண்டறிதல், மாணவர்களுக்கு இரத்த சோகை கண்டறிதல் பரிசோதனை, பிரசவித்த தாய்சேய் தாய்மார்களை பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு கொண்டு செல்லும் திட்டம், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனை, நாய் கடி ஊசி. பாம்பு கடி ஊசி ஆரம்ப சுகாதார மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சக்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் பாதுகாப்பு சிகிச்சை, இருதய சிகிச்சை, சிறுநீர் சிகிச்சை இதுபோல் மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தாண்டு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவுள்ளது.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 65,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 3,000 கடைகளை பிரிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 100 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக தொடங்கப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றன.
எதிர் வரும் 12-ந் தேதி அன்று தாயுமானவர் என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி உள்ளார்கள். இத்திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடு தேடி குடிமைப்பொருள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், சுமார் 20 இலட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இப்பொருள் வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரத்தில் 450 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு, கீரனுார் 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மையம் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவியள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கெள்ள வேண்டும்.
லெக்கையன்கோட்டை முதல் பழனி வரை நான்கு வழிச்சாலையும், ஒட்டன்சத்திரத்திலிருந்து மடத்துக்குளம் வரை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு, சுகாதாரம், கல்வி, பேருந்து வசதிகள், மின்சார வசதிகள் அனைத்தும் செய்துதரப்படுகிறது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மரு.ஆர்.சுகந்தி இராஜகுமாரி, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, ஆணையாளர் திருமதி சுவேதா, மாவட்ட சுகாதார அலுவலர்(பழனி) மரு.மோ.அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.