The Hon’ble Food and Civil Supply Minister – Oddanchatram
செ.வெ.எண்:-66/2025
நாள்:-20.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்டம், மண்டவாடி ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், மண்டவாடி ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(20.05.2025) திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மண்டவாடி ஊராட்சி, பெரியமண்டவாடி கிராமத்தில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், சின்னமண்டவாடி முதல் பெரியமண்டவாடி வரையிலான 3.40 கி.மீட்டர் துாரம் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்ட சாலை மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட வீடு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் செயல்படவில்லை. தமிழகத்தில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் ரூ.1.00 இலட்சம் கடனாக வழங்கப்படுகிறது. மேலும், வீடு கட்டுவதற்கான செங்கல், மணல் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவைருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.v
ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மறு கட்டுமானம் திட்டத்தில் வீடுகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மவாட்டம், ஒட்டன்சத்திரத்தில் 480 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.70.00 கோடி மதிப்பீட்டிலும், கீரனுாரில் 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.65.00 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆகமொத்தம் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மையம் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவியள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கெள்ள வேண்டும்.
தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயத்திற்கு 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக நெல் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை இருக்காது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.1000 கோடி நிதி வழங்கி இப்பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மக்களுக்கு அடிப்படை வசதியான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, இரயில்வே மேம்பாலம், பாலங்கள், மருத்துவமனைகள், பேருந்து வசதிகள், கல்வி வசதிகள், மின் வசதிகள், கல்லூரி மாணவ விடுதிகள் போன்ற வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக, முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(நெடுஞ்சாலைத்துறை) திரு.பொன்னுவேல், உதவி செயற்பொறியாளர் திரு.மாணிக்கவாசகம், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.