The Hon’ble Food and Civil Supply Minister – Oddanchatram-Vadakadu
செ.வெ.எண்: 13/2024
நாள்:-06.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வடகாடு ஊராட்சியில் ரூ.27.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து, கோட்டைவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகாடு ஊராட்சியில் ரூ.27.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து, கோட்டைவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு இன்று(06.10.2024) அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதொடு மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தை இன்னும் 10 ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. மேலும், தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் 2.50 இலட்சம் வீடுகளை பழுது பார்க்க ரூ.2,000 கோடி நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 17.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் கண்கருவிழி பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதம் 28,000 நியாயவிலைக் கடைகளில் கண் கருவிழி பதிவு கருவி பொருத்தப்பட்டுள்ளன.
நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு மாதம் 8000 மெ.டன் கோதுமை வழங்கப்படுகிறது. அதை 25,000 மெ.டன் அளவிற்கு உயர்ந்தி வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. அதன்பயனாக தற்போது 17,100 மெ.டன் கோதுமை வழங்க ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த மாதம் முதல் கூடுதல் கோதுமை நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேரும்.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, சேமிப்பு ஏற்படுகிறது.
மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கூட்டுறவு கடன் தொகை ரூ.12.00 இலட்சத்திலிருந்து ரூ.30.00 இலட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், ஒரு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளன.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியுள்ள அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில், நாமக்குநாமே திட்டம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்ணல் காந்தியடிகள், கிராமங்கள் வளர்ந்தால்தான் நகரங்கள் வளர்ச்சியடையும் என்று சொன்னார்கள். அந்த வகையில் கிராமங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். “மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்“ என்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வாக்குப்படி, மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் பரப்பாறு அணை கட்டப்பட்டது. மலைப்பகுதி கிராமங்களுக்கு மின்சார வசதி, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
பேரறிஞர் அண்ணா, மக்களிடம் செல், மக்களோடு பழகு, மக்களை நேசி அப்போதுதான் மக்கள் மனதில் இடம்பெற முடியும் என கூறியுள்ளார். அதன்படி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அந்த தேவைகள் குறித்து உயர் அலுவலர்களிடம் தெரிவித்து, அவற்றை நிறைவேற்றிட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இன்றையதினம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகாடு ஊராட்சியில் ரூ.27.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோட்டைவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் தலா 302 சதுர அடியில், சமையலறை, படுக்கையறை, அறை, கழிப்பறை வசதிகளுடன் ரூ.5.73 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் 27 வீடுகள் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன.
வடகாடு ஊராட்சி மிகவும் பின் தங்கிய மலைக்கிராமம். இங்கு சாலை வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்றப்பின்னர் வடகாடு ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 37 பணிகள் ரூ.4.14 கோடி மதிப்பீட்டிலும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து 12 பணிகள் ரூ.39.90 இலட்சம் மதிப்பீட்டிலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 85 பணிகள் ரூ.2.97 கோடி மதிப்பீட்டிலும், பழுதடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல் திட்டத்தில் 10 பணிகள் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டிலும், ஒன்றியப் பொதுநிதியிலிருந்து 10 பணிகள் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டிலும், நமக்கு நாமே திட்டத்தில் 6 பணிகள் ரூ.52.40 இலட்சம் மதிப்பீட்டிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தில் 7 பணிகள் ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டிலும், 15-வது நிதிக்குழு மானியத்தில் 44 பணிகள் ரூ.93.24 இலட்சம் மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு பணி ரூ.83.49 இலட்சம் மதிப்பீட்டிலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் 8 பணிகள் ரூ.16.10 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 10 பணிகள் ரூ.4.50 கோடி மதிப்பீட்டிலும், இந்து சமய அறநிலைத் துறை சார்பில் 3 பணிகள் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டிலும், பொதுப் பணித்துறை சார்பில் ஒரு பணி ரூ.3.00 கோடி மதிப்பீட்டிலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 3 பணிகள் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டிலும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் 5 பணிகள் ரூ.21.74 இலட்சம் மதிப்பீட்டிலும், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் 4 பணிகள் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 246 பணிகள் ரூ.19.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் திருமதி காயத்ரிதேவி தர்மராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி சங்கீதா பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.வெ.இராமராஜ், தாட்கோ மதுரை கோட்ட செயற்பொறியாளர் திருமதி பச்சை வடிவு, திட்ட மேற்பார்வையாளர் திரு.ஏ.ராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ச.வடிவேல்முருகன், திரு.பெ.காமராஜ், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, வடகாடு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி இரா.தனலட்சுமி, வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.இரா.ஜோதீஸ்வரன், வடகாடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி மு.பிரபா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.