Close

The Hon’ble Food and Civil Supply Minister – Sanarpatti Union-schemes

Publish Date : 26/12/2024
.

செ.வெ.எண்:-62/2024

நாள்:-24.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், ராஜாக்கப்பட்டி, சிலுவத்துார், கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி, வேம்பார்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சாணார்பட்டி, பஞ்சபட்டி மற்றும் கூவனுாத்து ஆகிய ஊராட்சிகளில் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(24.12.2024) திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராஜக்காபட்டி ஊராட்சியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டடம், சிலுவத்தூர் ஊராட்சியில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலக கட்டடம், கம்பிளியம்பட்டி ஊராட்சியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், செங்குறிச்சி ஊராட்சியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், வேம்பார்பட்டி ஊராட்சியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கட்டடம், அஞ்சுகுளிபட்டி ஊராட்சியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், சாணார்பட்டி ஊராட்சியில் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கட்டடம், பஞ்சபட்டி ஊராட்சிக்குட்பட்ட கொசவபட்டியில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கூவனூத்து ஊராட்சி, குரும்பபட்டியில் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் கட்டடம் ஆகியவற்றை இன்று(24.12.2024) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

மகளிர் சுயஉதவிக்குழுவினரின் 5 பவுனுக்கு கீழ் நகை கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கியில் பெண்கள் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கூட்டுறவு கடன் தொகை ரூ.12.00 இலட்சத்திலிருந்து ரூ.50.00 இலட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் சுமார் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. மேலும், ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் குறைவான வட்டியில் ரூ.1.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 7,000 வீடுகள் கட்டப்படவுள்ளன. சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 400 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட 2.5 இலட்சம் பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டு வீடுகளை பழுதுபார்க்க ரூ.50,000, கான்கிரீட் வீடுகளை பழுதுபார்க்க ரூ.1.50 இலட்சம் வழக்கப்படுகிறது. சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 200 வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 17.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 44 மாதங்களில் 2,500 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 230 முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் கண்கருவிழி பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. கறுப்பு, பழுப்பு இல்லாத அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக 700 அரிசி அரவை ஆலைகளிலும் கலர்சாப்டர் இயந்திரம் பொருத்தப்பட்டு தரமான அரிசி உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது.

விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் முதியோர் உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,200ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது, மேலும், அதிகளவு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகளை மேம்படுத்தும் வகையில் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 20,000 கி.மீட்டர் நீளம் சாலைகள் ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் அவர்கள் “நம்ம ஊரு சூப்பரு” என்று கூறி சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரத்தை பேணிகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சுகாதாரமான ஊராட்சியாக மாற்றிட வேண்டும்.

மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் வகையில் இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.2.00 வரையிலான மருத்துவ செலவை அரசே ஏற்கும்.

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சு.பழனியம்மாள், ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.சு.ராமதாஸ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் திரு.கா.விஜயன், திருமதி லலிதாமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி ஆர்.வி.சுமதி, திரு.இரா.இளையராஜா, நத்தம் பேரூராட்சித் தலைவர் திரு.சேக்சிக்கந்தர் பாட்சா, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி எம்.பராசக்தி, திரு.எஸ்.வெங்கடேசன், திருமதி வி.விஜயா, திரு.பி.மணிமாறன், திரு.பி.கந்தசாமி, திருமதி ஆர்.தேவி, திருமதி பஞ்சவர்ணம், திருமதி எஸ்.சலைட்மேரி, திருமதி முத்துலட்சுமி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.