The Hon’ble Food and Civil Supply Minister – Scheme meeting – Development work
செ.வெ.எண்:-60/2024
நாள்:-24.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, மாவட்ட மற்றும் வட்டார நிலை அலுவலர்களுடன் ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் இன்று(24.09.2024) ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தை இன்னும் 10 ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள், நிறைவேற்றப்படவுள்ள திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியுள்ள அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை வரும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீரனுார் பேரூராட்சியில் 432 வீடுகளுடனும், ஒட்டன்சத்திரத்தில் 472 வீடுகளுடனும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. காளாஞ்சிபட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான படித்த இளைஞர்கள் பயிற்சி பெற்று, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில், நாமக்குநாமே திட்டம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். ஒட்டன்சத்திரம் தொகுதி மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். “மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்“ என்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வாக்குப்படி, மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரறிஞர் அண்ணா, மக்களிடம் செல், மக்களோடு பழகு, மக்களை நேசி அப்போதுதான் மக்கள் மனதில் இடம்பெற முடியும் என கூறியுள்ளார். அதன்படி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அந்த தேவைகள் குறித்து உயர் அலுவலர்களிடம் தெரிவித்து, அவற்றை நிறைவேற்றிட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மனுவாக அளிக்கும்பட்சத்தில், அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு, நிதி ஒதுக்கீடு பெற்று வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றப்படும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி அவற்றை செயல்படுத்த துறை அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.கிசான்குமார், இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் திரு.ராஜ்குமார், இ.வ.ப., தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்குமார், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் நகராட்சித் துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திருமதி சுபாஷினி, வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜோதீஸ்வரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.