Close

The Hon’ble Food and Civil Supply Minister – Scheme meeting -Development work

Publish Date : 05/01/2025
.

செ.வெ.எண்:-06/2025

நாள்:-03.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் இன்று(03.01.2025) ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார துறை, வனத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும். நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நிறைவேற்றப்படவுள்ள திட்டப்பணிகள் குறித்தும் துறை அலுவலர்களுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை, அறிவிக்கப்பட்ட பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்தாலும், அவற்றை செயல்படுத்தும் இடத்தில் அரசு அலுவலர்கள் உள்ளனர். அரசின் திட்டங்களை மக்களைச் சென்று சேருவதில் அரசு அலுவலர்களின் பணி மிகவும் முக்கியமானது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொறுப்பேற்ற பின்னர் 44 மாதங்களில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டங்கள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலேயே ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில்தான் அதிகளவு பட்டா பூமிதானம், நத்தம் புறம்போக்கு இருக்கிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பட்டா வழங்குவது தொடர்பாக நிலுவையில் உள்ள சிரமங்களை சரிசெய்வதற்காக தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் வீடுகள் கட்டுவதற்கு தேவையான அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. மேலும், ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் குறைவான வட்டியில் ரூ.1.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான மின் இணைப்புகள், மின் மோட்டார்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும், மேடான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தை வரும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்திட்டத்தில் கீரனுார் பேரூராட்சியில் 432 வீடுகளுடனும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 480 வீடுகளுடனும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சாலை வசதி மற்றும் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்“ என்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வாக்குப்படி, மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடையக்கோட்டையில் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் தேவைப்படும் இடங்களில் கூட்டுறவு வங்கிகள் தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கீரனுாரில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் திருமணமண்டபம், கள்ளிமந்தையத்தில் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், பெண்கள் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டட ரூ.22.00 கோடி நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

பரப்பலாறு, நங்காஞ்சியாறு மற்றும் தலைக்குத்து ஆகிய இடங்களில் சுற்றுலாத்தலங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நரிக்கல்பட்டியில் கைத்தறிப்பூங்கா அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு யானை போன்ற வன விலங்குகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவர். எனவே, பக்தர்கள் பாதயாத்திரை வரும் பாதைகளில் சாலைகளை சீரமைத்து, குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி பாதுகாப்பான யாத்திரை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் மேற்கொள்ளப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் வரும் 5-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பதவி காலம் முடிவடைந்துவிட்டது என்று நினைக்காமல் அனைவரும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், கப்பிளியப்பட்டி-கிருஷ்ணகவுண்டன்புதுாரில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணிக்கான ஆணையை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு 3 சக்கர வண்டி ரூ.50,000 மதிப்பிலும், 7 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ரூ.56,000 மதிப்பிலும், 4 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் ரூ.3,28,000 மதிப்பிலும், 11 பயனாளிகளுக்கு செயற்கை கால் ரு.1,10,000 மதிப்பிலும், 10 பயனாளிகளுக்கு முடநீக்கு சாதனம் ரூ.1,50,000 மதிப்பிலும், 16 பயனாளிகளுக்கு காது கேட்கும கருவி ரூ.72,000 மதிப்பிலும், 6 பயனாளிகளுக்கு நடைப்பயிற்சி சாதனம் ரூ.6,000 மதிப்பிலும், 7 பயனாளிகளுக்கு ஊன்றுகோல் ரூ.3,500 மதிப்பிலும், 3 பயனாளிகளுக்கு தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான உபகரணங்கள் ரூ.7,500 மதிப்பிலும் என மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.7.83 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி சார் ஆட்சியர் திரு.சீ.கிஷன்குமார், இ.ஆ.ப., ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திருமதி சுபாஷினி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் திரு.மாரியப்பன், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டம் உதவிப்பொறியாளர் திரு.பொன்னுவேல், வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜோதீஸ்வரன், திரு.ராஜாமணி, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.