The Hon’ble Food and Civil Supply Minister – Scheme meeting-Development work
செ.வெ.எண்:-09/2025
நாள்:-02.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் 64 பயனாளிகளுக்கு பணி ஆணை மற்றும் 115 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் இன்று(02.08.2025) ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நிறைவேற்றப்படவுள்ள திட்டப்பணிகள் குறித்தும் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை, அறிவிக்கப்பட்ட பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அனைத்துத் திட்டப்பணிகளையும் தரமாகவும், விரைந்தும் முடித்திட வேண்டும். பட்டா வழங்குவது தொடர்பாக நிலுவையில் உள்ள சிரமங்களை சரிசெய்து, பட்டா வழங்க அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் பயடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் வீடுகள் கட்டுமான பணிகளை அனைத்து வசதிகளுடன் தரமாகவும், விரைந்தும் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். பொறுப்பேற்ற 51 மாத காலத்தில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, சொல்லாத பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.
அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பொதுமக்களைத் தேடி மருத்துவ வசதி அளிக்கும் வகையில், “நலம் காக்கும் ஸ்டாலின்“ திட்ட முகாமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 45 முகாம்கள் இன்றிலிருந்து தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 51 மாதங்களில் 20 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 66,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் 3000 முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றன. கலர்சாப்டர் இயந்திரம் பொருத்தப்பட்ட 700 அரிசி அரவை ஆலைகள் மூலம் நெல் அரவை செய்யப்பட்டு, கறுப்பு, பழுப்பு இல்லாத அரிசி வழங்கப்படுகிறது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 53 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு 44.94 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2025-ஆம் ஆண்டு 45.50 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நெல் குடோன்கள் கட்டப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லமும் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 51 மாத ஆட்சிக்காலத்தில் 13 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. 20 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் திட்டப்பணிகள், தடுப்பணைகள் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகள் இன்றையதினம் வழங்கப்படுகிறது.
மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளின் நிலை குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்தாலும், அவற்றை செயல்படுத்தும் இடத்தில் அரசு அலுவலர்கள் உள்ளனர். அரசின் திட்டங்களை மக்களைச் சென்று சேருவதில் அரசு அலுவலர்களின் பணி மிகவும் முக்கியமானது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொறுப்பேற்ற பின்னர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டங்கள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் 64 பயனாளிகளுக்கு பணி ஆணை, 115 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை ஆகியவற்ற வழங்கி, கால்நடை பராமரிப்புத்துறையின் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திரு.க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் திருமதி சுவேதா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.