The Hon’ble Food and Civil Supply Minister-schemes(Natham)
செ.வெ.எண்:-04/2025
நாள்: 01.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நத்தம் சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இன்று(01.08.2025) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நத்தம் பேரூராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணிகள், அறிவுசார் மையக் கட்டடம் கட்டும் பணிகள், சிறுபாலங்கள் மற்றும் வடிகாலுடன் கூடிய தார்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிதோடு மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுபேற்ற பின்பு நத்தம் பகுதிக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக இப்பகுதியில் கல்லூரி இல்லாமல் இருந்தது. தற்போது, நத்தத்தில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். இக்கல்லூரிக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்காக ரூ.18 கோடி விரைவில் அனுமதி தர இருக்கிறார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று இன்னுயிர் காக்கும் 48 திட்டத்தின்கீழ் அரசு அங்கிகரிக்கப்பட்ட 480 தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை 250 ஆகிய 730 மருத்துவமனைகளில் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை சேர்க்கப்பட்டால் 48 மணி நேரம் சிகிச்சைக்கு மேற்கொள்ள செலவாகும் தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரியில் துவங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் வயதானவர்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்று நாளை நலம் காக்கம் மு.க.ஸ்டாலின் அரசு திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்கள். இத்திட்டத்தின்கீழ் ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளில் தலைசிறந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதுபோன்ற இன்னுயிர் காக்கும் 48, மக்களை தேடி மருத்துவம், நலம் காக்கம் மு.க.ஸ்டாலின் ஆகிய மருத்துவத்துறையில் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்கள்.
நத்தம் சிறப்பு நிலை பேரூராட்சி நத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் தரை தளம் 306.00 சதுர மீட்டர். முதல் தளம் 306.00 சதுர மீட்டர், சாய்வு தளம் 140.00 சதுர மீட்டார் ஆக மொத்தம் 752.00 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடம் கட்டப்படவுள்ளது.
இக்கட்டத்தின் தரைதளத்தில் வரவேற்பு அறை, ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, தனிமைப்படுத்துதல் அறை, ஊசிபோடும் அறை, செவிலியர் அறை, அலுவலகம், மருந்தகம் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்படவுள்ளது.
முதல் தளத்தில் அறுவை சிகிச்சைக்குப்பின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கவனிப்பு அறை, தேற்றல் அறை, அறுவை அரங்கம். நோயாளிகள் அறை, மருத்துவர் மற்றும் செவிலியருக்கான தனித்தனி உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறைகள் வசதிகள் அமைக்கப்படவுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கைபிடியுடன் கூடிய சாய்வு தள வசதியும் அமைக்கப்படவுள்ளது.
மேலும், நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் மூலதன மானிய நிதி 2025-2026 திட்டம் கீழ் ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் நத்தம் பேரூராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணிகள், ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையக் கட்டடம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2025-2026 கீழ் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் சிறுபாலங்கள் மற்றும் வடிகாலுடன் கூடிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் என பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுபேற்று 51 மாதத்தில் 20 இலட்சம் நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடைகளை பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
அதனை தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் நத்தம் பேரூராட்சி முளையூரில் புதிய கூட்டுறவு கடன் சங்கத்தினை திறந்து வைத்து, நியாயவிலைக்கடையை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ந.அய்யம்பட்டியில் புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை, மெய்யம்பட்டியில் புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை, மெய்யம்பட்டியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இன்றை தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ஆர்.இராஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.குருமூர்த்தி, நத்தம் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மகுடபதி, திரு.கிருஷணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.