The Hon’ble Food and Civil Supply Minister-School-Oddanchatram
செ.வெ.எண்:-23/2025
நாள்: 06.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய பங்களிப்பு நிதியிலிருந்து(சி.எஸ்.ஆர்.) ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து, ஒட்டன்சத்திரத்தில் ரூ.14.00 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய பங்களிப்பு நிதியிலிருந்து(சி.எஸ்.ஆர்.) ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை இன்று(06.08.2025) திறந்து வைத்து, ஒட்டன்சத்திரத்தில் ரூ.14.00 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகள் இருந்தாலும், பள்ளிக்கல்வித் துறையும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் தனது 2 கண்கள் என்று கூறி வருகிறார். அந்த வகையில், கடந்த நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20 இலட்சம் லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஜிஆர்பி நிறுவனத்தின் பங்களிப்புடன் சமுதாய பங்களிப்பு நிதி(சி.எஸ்.ஆர்.) ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் மற்றும் ஒரு அலுவலக அறை கட்டப்பட்டு, மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜிஆர்பி நிறுவனம் சார்பில் ஏற்கனவே ரூ.87 இலட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் மற்றும் ஒரு அலுவலக அறை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் ஜிஆர்பி நிறுவனம் சார்பில் 23 பள்ளிகளுக்கு கணினி வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிற்கல்வியில் சேருவதற்கு வசதியாக 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி வருகிறார்கள். இதன்மூலம் நடப்பு ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கும், 2 மாணவ, மாணவிகள் பி.டி.எஸ். படிப்பதற்கும் தேர்வாகி உள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பயிற்சி நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.
ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கபடி அணி கடந்த 8 ஆண்டுகளாக முதலமைச்சர் கோப்பையை பெற்று தொடர்ந்து சாதனைப் படைத்து வருகிறது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமூகத்தில் உயர வேண்டும் என்பதற்காக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாத்துரை, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோர் பெண்கள் மேம்பாட்டிற்காக பாடுபாட்டனர். அந்த வகையில், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் ஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். குறிகோள், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். படிப்பு, விளையாட்டுடன் ஒழுக்கம் மிகவும் முக்கியம். அரசின் திட்டங்களை பயன்படுத்தி நன்கு படித்து, உயர்நிலைக்கு வந்து, வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையுடன், ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
முன்னதாக, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் ரூ.14.00 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த உயர்மட்ட நடை மேம்பாலத்தில் இருபுறமும் நகரும் படிக்கட்டுகள் மற்றும் இருபுறமும் மின் துாக்கிகள், மின் இணைப்புகள் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், சிசிடிவ கேமரா வசதியுடன் அமைக்கப்படவுள்ளது. பெருநகரில் மட்டும் அமைக்கப்பட்டுள்ள இந்த சேவை திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக ஒட்டன்சத்திரத்தில் அமைக்கப்படள்ளது.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, ஆணையாளர் திருமதி சுவேதா, ஜி.ஆர்.பி. நிறுவனர் திரு.ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம், முக்கிய பிரமுகர்கள் திரு.இரா.ஜோதீஸ்வரன், திரு.பி.சி.தங்கம், திரு.தி.தர்மராஜன், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.