Close

The Hon’ble Food and Civil Supply Minister -Tourism-Palani to Tirupathi Bus

Publish Date : 22/07/2024
.

செ.வெ.எண்:-53/2024

நாள்:-19.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனியில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலையில் பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கத்தை பழனி தண்டாயுதபாணி இல்லத்திலிருந்து இன்று (19.07.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சுற்றுலாத்துறையை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். ஆன்மீக தலங்களை மேம்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முருகபெருமானின் அறுபடை வீடுகளுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில், அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் ஆன்மீக பேருந்துகள் தமிழக அரசு சார்பில் இயக்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்கிணங்க திண்டுக்கல் மாவட்டத்தின் ஆன்மீக சுற்றுலாத்தலமான பழனியில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா பேருந்து இயக்கம் இன்று(19.07.2024) தொடங்கி வைக்கப்படுகிறது. மொத்தம் 40 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம். இன்றையதினம் பழனியில் இருந்து 10 பயணிகளும், திண்டுக்கல்லில் இருந்து 15 பயணிகளும் என 25 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் இந்த பேருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல் வழியாக சனிக்கிழமை காலை ராணிப்பேட்டை சென்றடையும். ராணிப்பேட்டையில் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்களை தயார் செய்து கொண்டு, திருப்பதி சுற்றுலா பயணத்தை மேற்கொள்வார்கள்.

தமிழ்நாடு சுற்றுலா கழகத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கியுள்ள விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலமாக சுற்றுலா பயணிகள் தரிசனம் மேற்கொள்வார்கள். பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படும். மேலும் மதிய உணவுக்கு பின் திருச்சானூர் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இராணிப்பேட்டை ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகத்தில் இரவு உணவு வழங்கப்படும். அங்கிருந்து சுற்றுலா பயணிகள் பயணத்தை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் வழியாக பழனி வந்தடையும் வகையில் இந்த ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது.

இந்த சுற்றுலா பயணத்திற்கான கட்டணம் குழந்தைகளுக்கு ரூ.4,600, பெரியவர்களுக்கு ரூ.5,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை 3 வேளை உணவு மற்றும் சிறப்பு தரிசன கட்டணம் உள்ளிட்டவை இக்கட்டணத்திற்குள் அடங்கும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திருப்பதி சுற்றுலா பயணத்திட்டத்திற்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com என்ற இணையதள பக்கத்திலும் அல்லது நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்கள் (180042531111 (Toll free), 044-25333333 மற்றும் 044-25333444) வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

தமிழக அரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டங்களை பக்தர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து, பழனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி ஈஸ்வரி கருப்பசாமி, பழனி நகர்மன்ற துணைத்தலைவர் திரு.கந்தசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மதுரை மண்டல அலுவலர் திரு.டேவிட்துரை, மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ஹ.கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.