Close

The Hon’ble Food and Civil Supply Minister – Samathuvapuram

Publish Date : 24/07/2024
.

செ.வெ.எண்:-60/2024

நாள்:-23.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கொழுமம்கொண்டான் ஊராட்சியில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிய சமத்துவபுரம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, 114 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொழுமம்கொண்டான் ஊராட்சியில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிய சமத்துவபுரம் கட்டும் பணிக்கு இன்று(23.07.2024) அடிக்கல் நாட்டி, 114 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

ஜாதி வேறுபாடு இன்றி, அனைவரும் ஒன்றுபட்டு சகோதரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து வாழ வழிவகை ஏற்படுத்தும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ‘சமத்துவபுரம்’ திட்டத்தை கொண்டுவந்தார்.

அதன்படி, தமிழகத்தில் 2023-24-ஆம் ஆண்டில் 8 புதிய சமத்துவபுரங்கள் “பெரியார் நினைவு சமத்துவபுரம்“ திட்டத்தின் கீழ் ரூ.50.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளன. அதில் ஒன்று திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொழுமம்கொண்டான் ஊராட்சியில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இங்கு 100 வீடுகள் கட்டப்படவுள்ளன. ஒவ்வொரு வீடும் 300 சதுர அடியில் தலா ரூ.6.20 இலட்சம் மதிப்பீட்டில், குடிநீர் வசதி, கழிப்பறை வசதியுடன் கட்டப்படவுள்ளன. மேலும் பெரியார் சிலை ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டிலும், நுழைவு வாயில் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்படவுள்ளன. இதர வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதி, காய்கறித் தோட்டம், சிறுவர் பூங்கா, விளையாட்டு திடல், சிறு நுாலகம், நியாயவிலைக்கடை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, சமுதாயக்கூடம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் சமத்துவபுரம் அமைக்கப்படவுள்ளது. மொத்தம் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் அமைக்கப்படவுள்ளது. சமத்துவபுரத்தில் தகுதியான பயனாளிகளுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

விளிம்பு நிலையில், வீடு இல்லாமல் குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு சுயமாக குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இலவச வீடு வழங்கும் திட்டம், இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல் கோட்டத்தில் 2 இலட்சம் பயனாளர்களும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 44.65 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது.

.

.

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், இலவச வீட்டுமனைப் பட்டா 81 பயனாளிகளுக்கு ரூ.58.32 இலட்சம் மதிப்பீட்டிலும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு நிதியுதவி திட்டத்தில 2 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பீட்டிலும், ஊட்டச்சத்து பெட்டகம் 6 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் மண் உயிர் காக்கும் திட்டத்தில் 2 பயனாளிகளுக்கு ரூ.5,000 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4,000 மதிப்பீட்டிலும், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4,320 மதிப்பீட்டிலும், பயிர்க்கடன் 14 பயனாளிகளுக்கு ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டிலும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஒரு பயனாளிக்கு ரூ.96,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவு மகளிர் சுய உதவி குழு கடன் 4 பயனாளிகளுக்கு ரூ.18.13 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 114 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.