Close

The Hon’ble Health Minister Program (Kodaikkanal )

Publish Date : 01/07/2025
.

செ.வெ.எண்:-111/2025

நாள்:-29.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் பழனி சுகாதார மாவட்டத்தில் ரூ.21.64 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தனர்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் இன்று(29.06.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.10.59 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மருத்துவக் கட்டமைப்புகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.11.05 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மருத்துவக் கட்டடங்கள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். ஆகமொத்தம், முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகள் என ரூ.21.64 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பழனி அரசு மருத்துவமனையில் ரூ.79 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள்மையம், கொடைக்கானலில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நெய்க்காரப்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவலாப்பட்டி மற்றும் கூக்கால் ஆகிய பகுதிகளில் தலா ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், பாப்பம்பட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், கவுஞ்சி, அடுக்கம், கோவில்பட்டி மற்றும் பூண்டி ஆகிய கிராமங்களில் தலா ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், மன்னவனுாரில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு, பூம்பாறையில் ரூ.87 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் குடியிருப்பு, தேரடி, அடிவாரம் மற்றும் அண்ணாமலை1 ஆகிய இடங்களில் தலா ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள், வேடசந்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலுாரில் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வடமதுரையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்கல்பட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டடம் என ரூ.10.59 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற புதிய மருத்துவக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பள்ளம் மற்றும் பெருமாள்மலை ஆகிய கிராமங்களில் தலா ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும், பூவத்துாரில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெருமாள்மலையில் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், வேடசந்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடமதுரையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூவக்காப்பட்டி, காணப்பாடி மற்றும் அய்யலுார் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், தொட்டனம்பட்டியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசப்பிள்ளைப்பட்டியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் 11.05 கோடி மதிப்பீட்டில் 11 மருத்துவக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆகமொத்தம், பழனி சுகாதார மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகள் என ரூ.21.64 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த நிறைவடைந்த கட்டடப்பணிகள் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், புதிய மருத்துவ கட்டடங்களுக்கான பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டியிருக்கிறது. மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்களும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்களும், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நேற்று காலை திண்டுக்கல் பகுதியில் இருக்கின்ற அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே ஒன்றும், சிடி ஸ்கேன் கருவி ஒன்றும் ஆகிய இரண்டும் புதியதாக மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே சிடி ஸ்கேன் கருவி இருக்கிறது. கூடுதலாக அதிக மக்கள் பயன்பாடு இருக்கின்ற காரணத்தினால் புதியதாக ஒரு சிடி ஸ்கேன் கருவியும், அதே போல் ஏற்கனவே இரண்டு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி இருக்கும் நிலையில் கூடுதலாக ஒரு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியும் ரூ.2.81 கோடி மதிப்பீட்டிலான இரண்டு மருத்துவ அதிநவீன உபகரணங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 4 மருத்துவத்துறைக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 11 கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆக நேற்று மட்டும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 12.96 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டும். கட்ட வேண்டிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து இன்றை தினம் கொடைக்கானல் பகுதியில் பழனி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட புதிதாக கட்டப்பட்ட 19 கட்டடங்கள் ரூ.10.59 கோடி மதிப்பீட்டிலான கட்டடங்கள் பணிகள் முழுமையுற்று மக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாது இன்னும் மக்களுக்கு தேவை மற்றும் அவசியம் என்று கருதப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் வைக்கப்படும் கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்று 11 புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்ற வகையில் அந்த பணிகளும் நிறைவுற்று இருக்கின்றது. ரூ.11.05 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொடைக்காலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் ரூ.21.64 கோடி மதிப்பீட்டில் 19 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டு, 11 கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலை பொருத்த வரை மாண்புமிகு பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள், தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்து தினந்தோறும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகிறார்கள் என்ற வகையிலும், நூற்றுக்கணக்கான மலை கிராமங்கள் இருக்கின்ற காரணத்தினாலும் இப்பகுதியில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்கின்ற வகையில் கோரிக்கை வைத்தார்கள். அந்த வகையில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கொடைக்கானல் பகுதியில் உள்ள 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டடங்கள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வரலாற்றிலேயே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் புதிய கட்டடங்கள் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் நிறைவு பெற்றுள்ளது. அதே போல் கொடைக்கானல் பகுதியில் 20 துணை சுகாதார நிலையங்கள் இருக்கிறது. இதில் 2 மட்டுமே பயன்படுத்துவதற்கு தகுதி உடைய கட்டடங்களாக உள்ளது. இந்த அரசு பெறுப்பேற்ற பிறகு 4 புதிய கட்டடங்கள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றையக்கு 6 புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 3 கட்டடங்களுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. 3 கட்டடங்களுக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக மொத்தம் 20 துணை சுகாதார நிலையங்கள் கட்டும் பணிகள் கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவாட்டத்தை பொருத்த வரை பழனி அரசு மாவட்ட மருத்துவமனையில் ரூ.9.00 கோடி செலவில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும், அப்சர்வெட்டரி நகர்புற நலவாழ்வு மையத்திலும், ஒட்டன்சத்திரத்தில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை மைய கட்டடம், மார்க்கம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடம், வேடசந்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆடலூர் பன்றிமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் ஆகிய ஏராளமான கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 03.07.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆடலூர் பன்றிமலை பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடத்தை திறந்து வைக்க இருகிறார்கள். மேலும், அப்சர்வெட்டரி பகுதியில் நகர்புறு சுகாதார நிலையம் கட்டடத்தை திறந்து வைக்க இருகிறார்கள். மார்க்கம்பட்டி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடத்தை திறந்து வைக்க இருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 03.07.2025 அன்று 2 ஆரம்ப சுகாதார நிலைங்கள் இதில் 1 நகர்புற சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் திறந்து வைக்க உள்ளார்கள்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பொறுப்பேற்ற பிறகு 9 நகர்புற நல வாழ்வு மைய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டியிருக்கிறது. 15 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டியிருக்கிறது. 16 ஆரம்ப சுகாதார நிலைங்கள் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டியிருக்கிறது. பழனி அரசு மருத்துவ மனை மாவட்டத்தில் கண் அறுவை அரங்கம் திறந்து வைக்கப்பட்டியிருக்கிறது. கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு கட்டடம் திறந்து வைக்கபட்டியிருக்கிறது. மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டியிருக்கிறது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 3600 நபர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்களும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்களும், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்களும் ஒருங்கிணைந்து முதலமைச்சர் அவர்களிடம் உலக பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமான பழனியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதனை ஏற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பழனியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமையும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தமிழ்நாட்டை பொறுத்த வரை 19 மாவட்டங்களில் 25 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ.1018.கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவுற்ற பிறகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழநாட்டில் 25 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை திறந்து வைப்பார்கள்.

மருத்துவத்துறை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு நேரத்தில் 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் 708 நகர்புற நல வாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலைங்கள் என்று ஏராளமான புதிய மருத்துவமனைகள் கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளார்கள்.

பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் மலை கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் பிரசவ காலங்களில் தாய் சேய் இறப்பு இல்லாமல் அவர்களை பாதுகாக்கின்ற வகையில் கருத்து கூறியுள்ளார்கள். மலை பகுதியில் பெருமாள் மலை பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்கு குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன்னாள் ஒருவாரமும், பிரசவத்திற்கு பின்னர் ஒரு வாரமும் மருத்துவமனையில் தங்கி இருந்து உணவு வசதிகள் ஏற்படுத்தி அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இக்கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டியிருக்கிறது. இன்றைய தினம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பெருமாள் மலையில் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிந்தவுடன் பெருமாள் மலையில் பிரசவ காலங்களில் ஒரு வார காலத்திற்கு முன்னார் வந்து மருத்துவமனையில் சேர்ந்து கொள்வதும், பிரசவத்திற்கு பிறகு ஒரு வார காலங்கள் இருந்து பின்னர் வீட்டிற்கு பாதுகாப்பாக செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டியிருக்கிறது. அதில் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ரூ.10,000 வரை செலவு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, திண்டுக்கல் மாவட்டம், கொசுகுறிச்சி, பழனியில் கே.கீரனூர், நாமக்கலில் பவர்காடு, ஆத்தூரில் வாழவந்தி, வேலூரில் ஓடகாத்தூர், திருப்பத்தூரில் ஆதவனூர், திருச்சியில் செங்காட்டுப்பட்டி, கள்ளக்குறிச்சியில் கரியலூர், திருவண்ணாமலையில் ஒமுரைமாந்தூர், நாகர்கோவிலில் பேச்சிப்பாறை, கோவையில் வால்பாறை, திருப்பூரில் எரிசனம்பட்டி, நீலகிரில் அய்யன்சொல்லி, ஈரோட்டில் தாளவாடி, தருமபுரியில் தீர்த்தமலை, கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி ஆகிய 17 இடங்களில் மலைவாழ் மக்கள் பயன்பெறுகின்ற வகையில் இத்திட்டம் பயன்பாட்டில் இருக்கிறது. இத்திட்டத்தினை பெருமாள் மலைக்கும் விரிவு படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் அமரர் ஊர்தி வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த மருத்துவமனைக்கு அமரர் ஊர்தி இரண்டு நாட்களுக்குள் ஏற்பாடு செய்யப்படும்.

வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் அவர்கள் தொகுதியில் கட்டப்பட்டு வரும் பணிகளை விரைந்து திறந்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். மருத்துவ உபகரணங்கள் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைப்பார்கள் என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இன்றை தினம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 1 கர்ப்பிணி தாய்மாருக்கு முதல் தவணையாக ரூ.6000, 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.4000 மதிப்பிலாக நியூட்ரிசன் பெட்டம், 1 கர்ப்பிணி தாய்மாருக்கு இரண்டாம் தவணையாக ரூ.6000, 1 கர்ப்பிணி தாய்மாருக்கு முன்றாம் தவணையாக ரூ.2000 என 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18,000 மதிப்பீட்டிலான நலத்திட்டமும், முதலமைச்சர் மருத்துவ காப்பீடட்டு திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.25.00 இலட்சம் மதிபீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.திருநாவுக்கரசு, கொடைக்கானல் நகராட்சித் தலைவர் திரு.பா.செல்லத்துரை, துணைத்தலைவர் திரு.கே.பி.என்.மாயக்கண்ணன், பழனி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.மோ.அனிதா, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.த.மாணிக்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.