The Hon’ble Rural Development Minister – DGL Corporation
செ.வெ.எண்:-70/2024
நாள்: 26.07.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2.96 கோடி மதிப்பீட்டிலான குப்பை சேகரிக்கும் வாகனம் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கி, ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று(26.07.2024) தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2.96 கோடி மதிப்பீட்டிலான குப்பை சேகரிக்கும் வாகனம் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கி, திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதோடு, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். குழந்தைகள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதிக கல்வி நிலையங்கள் கட்டுவதற்காக ரூ.7,500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
மாணவிகளின் கல்வி பொருளாதார காரணங்களால் தடைபடக்கூடாது என்பதற்காக புதுமைப் பெண் திட்டத்தினை ஏற்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்கு என 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ், 23 இலகு ரக வாகனங்கள் ரூ.1.67 கோடி மதிப்பீட்டிலும், ஒரு கிட்டாட்சி இயந்திரம் ரூ.58.00 இலட்சம் மதிப்பீட்டிலும், 2 மண் அள்ளும் இயந்திரங்கள் ரூ.70.40 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 26 வாகனங்கள் ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்காக இன்று வழங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு ரத வீதி மாநகராட்சி பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் கூடுதல் வகுப்பறை கட்டடம் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.25.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், நவீன கழிவறை கட்டுதல், சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய 10 பணிகளுக்கு மாநில நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ.3.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 9 மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் அபிவிருத்தி செய்யும் பணிகளுக்கு மாநில நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.1.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருக்கோயில் கிரிவலப்பாதைகளில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலையோர வியாபாரிகளின் நலனை பாதுகாத்திட திட்டங்கள் செயல்படுத்தப்படும். அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன்படி செயல்படுத்தப்படும். அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக புகார் வரும்பட்சத்தில், போதுமான கால அவகாசம் வழங்கி சட்டப்படி அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். நேர்மையான அரசு நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முறைகேடு செயல்களில் ஈடுபடும் ஒருசில தனிநபர்கள் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு பின்னர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் திரு.ச.இராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரவிச்சந்திரன், மாநகராட்சி மேற்கு மண்டல குழு தலைவர் திரு.மு.பிலால்உசேன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.