Close

The Hon’ble Rural Development Minister – Kalaignar Kanavu Illam – Pillaiyarnatham

Publish Date : 28/08/2024
.

செ.வெ.எண்:-60/2024

நாள்: 22.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ”கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்நத்தத்தில் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை இன்று(22.08.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதோடு, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்குவதற்காக “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 2024-25-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் 08.07.2024 முதல் 08.08.2024 வரை பல்வேறு கட்டங்களாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 307 வீடுகள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 1069 வீடுகள், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 399 வீடுகள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 833 வீடுகள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 433 வீடுகள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 732 வீடுகள், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 165 வீடுகள், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 260 வீடுகள், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 164 வீடுகள், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 183 வீடுகள், என மொத்தம் 6328 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மேலும் தகுதியுள்ள பயனாளிகள் கண்டறியப்பட்டு 117 நபர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. ஆகமொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 6445 வீடுகள் கட்டப்படவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியான குடும்பங்களில் பட்டா இல்லாத பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா வழங்கி, அந்தப்பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து, “குடிசை இல்லாத மாவட்டம்“ ஆக மாற்றவும், விடுபட்ட குடிசைகள் ஏதும் கண்டறியப்பட்டிருப்பின் இக்கணக்கெடுப்பில் சேர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த நிதியாண்டிற்குள் வீடுகள் கட்டி முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வீடுகள் கட்டுமான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளை 100 நபர்கள் வரை பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வீடுகட்ட குறைந்தபட்ச பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன.

ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கலாம். கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.1.00 இலட்சம் வரை கடனுதவி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், ஏற்கனவே கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பழுதுபார்க்க ரூ.2000 கோடி நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் இன்னும் 6 ஆண்டுகளில் சொந்த வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலையையும், குடிசைகள் இல்லை என்ற நிலையையும் உருவாக்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய பொதுமக்களின் துயர் துடைத்திட இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1.16 கோடி பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள். தகுதியுள்ளவர்கள் விடுபட்டியிருந்தால் அவர்களின் மனுக்களும் பரிசீலித்து உரிமைத் தொகை பெற்றுத்தரப்படும்.

மாணவிகளின் உயர்கல்வி பொருளாதார காரணங்களால் தடைபடக்கூடாது என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தினை ஏற்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற பகுதியில் வசிப்பவர்கள் நெடுந்துாரம் சென்று கல்வி பயிலும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் கிராமப்பகுதிகளில் கல்லுாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திட ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்து வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவர புதிய திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஏதாவது ஒரு அரசின் திட்டம் சென்றடைய வேண்டும் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் நல்ஆதரவு தர வேண்டும். அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு. மு.பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திருமதி ம.ஹேமலதா மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி பத்மாவதி ராஜகணேஷ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி என்.சிந்தாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பெ.தட்சணாமூர்த்தி, பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.உலகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.