The Hon’ble Rural Development Minister – Meeting
செ.வெ.எண்:-17/2025
நாள்:-05.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 ஊராட்சிகளில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 ஊராட்சிகளில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடங்கள் அமைப்பதற்கான பணிகளை இன்று(05.07.2025) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, காமாட்சிபுரம் ஊராட்சி கே.எல்லைப்பட்டியில் ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதிநேர நியாயவிலைக்கடை புதிக கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் வழங்கினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.
அதன்படி, சில்வார்பட்டி ஊராட்சி, சில்வார்பட்டி, கே.புதுக்கோட்டை ஊராட்சி, கே.புதுக்கோட்டை காலனி, முருநெல்லிக்கோட்டை ஊராட்சி, சுள்ளெறும்பு காலனி, புதுச்சத்திரம் ஊராட்சி, சாத்தையப்பனூர், காமாட்சிபுரம் ஊராட்சி, கே.எல்லைப்பட்டி, கசவனம்பட்டி ஊராட்சி, பாப்பான்குளம் ஆகிய கிராமங்களில் தலா ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் கோனூர் ஊராட்சி, கீழத்திப்பம்பட்டியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடங்கள் அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், காமாட்சிபுரம் ஊராட்சி கே.எல்லைப்பட்டியில் ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதிநேர நியாயவிலைக்கடை புதிக கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்வதிலும், ஒன்றிய அரசின் நிதி கிடைக்காவிட்டாலும், மாநில அரசின் நிதியிலிருந்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக ஜூலை 15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டதில், சுமார் 80,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 3000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் 1500 வீடுகள் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதுதவிர பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் ஏராளமான வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், 100 நாள் வேலை திட்டத்தில் ஒன்றிய அரசிடமிருந்து நிதி கிடைக்காதபோதிலும், மாநில அரசின் நிதியிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, அவர்கள் பாதுகாப்பாக வசிப்பதற்காக வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், உதவி இயக்குநர்(ஊராட்சி) திரு.என்.சீனிவாசபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மலர்வண்ணன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
.