Close

The Hon’ble Rural Development Minister – Reddiyarchatram

Publish Date : 29/10/2024
.

செ.வெ.எண்:-63/2024

நாள்:28.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள 24 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.75.90 இலட்சம் மதிப்பீட்டில் 30 மின்கல வண்டிகள், 394 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலை இல்லா வேஷ்டி, சேலைகளை வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துாய்மை பாரத இயக்கம்(ஊரகம்) மற்றும் 15-வது நிதிக்குழு மானியம் இணைந்த திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள 24 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.75.90 இலட்சம் மதிப்பீட்டில் 30 மின்கல வண்டிகள், 394 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலை இல்லா வேஷ்டி, சேலைகளை பயனாளிகளுக்கு இன்று(28.10.2024) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்கியுள்ளார். அனைவருக்கும் குடியிருக்க வீடு, போக்குவரத்து வசதி, சுகாதாரம், மருத்துவ வசதி, கல்வி உள்ளிட்ட வசதிகளை உருவாக்கிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார். தமிழ்நாட்டில் பொதுமக்கள் நலனுக்காக மிகச்சிறந்த மருத்துவத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி மக்களும் தரமான வீடுகளில் குடியிருக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய கல்லுாரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நமது சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்துாரில் 2 கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் தடையின்றி உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வழங்கும் வகையில் இல்லை என்ற வார்த்தையை அகற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

1980-ல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், எனது பிறந்தநாளில் மரக்கன்று நடுங்கள் என்று சொன்னார்கள். அதன்படி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. மரங்கள் வளர்க்கப்பட்டதன் பயனாக தமிழ்நாட்டில் போதியளவு மழை பெய்து வருகிறது.

துாய்மை பாரத இயக்கம்(ஊரகம்) மற்றும் 15வது நிதிக்குழு மானியம் இணைந்த திட்டத்தில் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக செய்திட ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சிகளுக்கு ரூ.75.90 இலட்சம் மதிப்பீட்டில் 30 மின்கலன் வண்டிகள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 394 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளி திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் முதியோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என 76,000 பயனாளிகளுக்கு விலை இல்லா வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. பயனாளிகளுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் எண்ணத்தை மதித்து செயல்படும் ஆட்சி, மக்களுடன் மக்களாக, மக்களுக்காக உழைத்துக்கொண்டு, எப்போதும் நம்மைப் பற்றியே சிந்தித்து, பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் திருமதி த.ராஜேஸ்வரி தமிழ்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெயசித்ரகலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கிருஷ்ணன், திரு.மலரவன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.