The Hon’ble Rural Development Minister-Tamil Pudhalvan Scheme-Inauguration
செ.வெ.எண்:-20/2024
நாள்:-09.08.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் “தமிழ் புதல்வன்“ திட்ட பயனாளிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் “தமிழ்ப் புதல்வன்“ திட்டத்தை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று (09.08.2024) தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.பெ.செந்தில்குமார் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் “தமிழ் புதல்வன்“ திட்ட பயனாளிகளுக்கு பற்று அட்டைகளை இன்று (09.08.2024) வழங்கினார்.
இவ்விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மேலும் உயர்கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஏராளமான ஏழை மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நானும் இந்த கல்வி உதவித்தொகையை பயன்படுத்திதான் உயர்கல்வி பயின்றேன்.
கல்விச் செல்வம் அழியாச்செல்வம். இந்த செல்வத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘புதுமைப்பெண் திட்டம்’ பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், அரசு பள்ளிகளில் பயின்ற, ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் ‘தமிழ்ப்புதல்வன்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையானது நேரடியாக மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். முன்பெல்லாம் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மணியார்டர் மூலமாக பெற்றோர்களிடமிருந்து பணம் வந்து சேரும். ஆனால் தற்போது மாணவர்களின் வங்கிக் கணக்கிலேயே உதவித்தொகை வரவு வைக்கப்படுகிறது.
‘தமிழ்ப்புதல்வன்’ எனும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்க்கைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுடைய உயர்கல்வி தேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் 05.09.2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ‘புதுமைப்பெண் திட்டம்’ ஆனது, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 109 கல்லூரிகளில் 5,615 பயனாளிகள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். இது பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் சேர்க்கை விகிதத்தினை அதிகரிக்கும் பொருட்டு, ‘தமிழ்ப்புதல்வன’ எனும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோயம்புத்தூரில் இன்று (09.08.2024) துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பொறியியல் கல்லூரிகள், 22 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்வி நிலையங்கள், 8 தொழிற்பயிற்சி நிலையங்கள், 10 பாலிடெக்னிக் கல்லூரிகள், ஒரு சட்டக்கல்லூரி, ஒரு ஆசிரியர் பயிற்சி நிலையம், ஒரு பல்கலைக்கழகம், 8 பார்மசி மற்றும் 3 வேளாண்மை கல்லூரிகள் உட்பட 75 கல்லூரிகளில் 5,112 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, கல்வி பயின்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதுடன், நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் மற்றும் உங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட்டது கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான். அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் 6 கல்லுாரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 2 கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் அரசு கல்லூரி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய பொதுமக்களின் துயர் துடைத்திட இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டத்தினை ஏற்படுத்தியதனால் தற்போது 1.16 கோடி பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திட ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்து வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவர புதிய திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
கல்வி, விவசாயம் என அனைத்துத் துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக வழங்கப்பட்ட 16 வாகனங்களின் சாவிகளை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு. ப.க.சிவகுருசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி த.ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி சுப்புலட்சுமி சண்முகம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமதி மருதம்மாள் முருகன், திருமதி பாண்டிமீனா, சில்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஆர்.தனலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.