The Hon’ble Rural Development minister-Ungaludan Stalin (Agaram Town Panjayath)
செ.வெ.எண்:-76/2025
நாள்: 19.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அகரம் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சியில் இன்று(19.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நேரில் வந்து மனுக்களை பெறுவதாக கருதும் அளவிற்கு இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மரியநாதபுரம், அகரம் பேரூராட்சி, ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆலமரத்துப்பட்டி, வத்தலகுண்டு, குஜிலியம்பாறை லந்தக்கோட்டை என 6 இடங்களில் முகாம் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டு அறிந்து வருகிறார். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 15 இலட்சம் மகளிருக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கப்படும் நிலையில் இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் நேரடியாக முதல்வரின் கவனத்திற்கு சென்று அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பகுதி மாங்கரை ஆற்றிலிருந்து பெருமாள் கோயில் குளம், புதுக்குளம், மந்தைகுளம், அப்பணம்பட்டி குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்கால்களை நிரந்தரமாக சீரமைக்க ஏதுவாக சிமெண்ட் வாய்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அக்கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு தான் இந்த மக்கள் அரசு, மக்களுடைய முதல்வர் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
ஒவ்வொரு நாளும் மகளிர் உரிமைத்தொகைக்கு மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார். இம்முகாமில் மனுக்கள் அளித்தால் தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும், இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ஆர்.இராஜா, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.