Close

The Hon’ble Rural Development minister – Ungaludan Stalin -Kasavanampatti-scheme

Publish Date : 07/08/2025
.

செ.வெ.எண்:-20/2025

நாள்: 05.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், கசவனம்பட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கசவனம்பட்டி மற்றும் குரும்பப்பட்டியில் தலா ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்து, கசவனம்பட்டியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கசவனம்பட்டியில் இன்று(05.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், கசவனம்பட்டி மற்றும் குரும்பப்பட்டியில் தலா ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்து, கசவனம்பட்டியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் விடுபட்டு போன தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மேலும். இம்முகாமில் மனு அளிக்கும் 60 வயதினை தாண்டியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.5.00 இலட்சம் சிகிச்சை மேற்கொள்ளலாம். சிகிச்சைக்கு கூடுதலான செலவு ஏற்படுமெனில் அதுகுறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனு அனுப்பி வைத்தால் ரூ.30 இலட்சம் வரை சிகிச்சைக்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம். எனவே, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். அதற்கான தொகை அரசு வழங்கும்.

அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நேரில் வந்து மனுக்களை பெறுவதாக கருதும் அளவிற்கு இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள்அளித்து, ஒப்புகைச் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு வீடு தேடிச் சென்றடைய வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இன்றைய முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், 5 பயனாளிகளுக்கு பட்டா மற்றும் ஒரு பயனாளிக்கு புதிய குடும்ப அட்டை ஆகியவற்றை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

மேலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், கசவனம்பட்டி மற்றும் குரும்பப்பட்டி ஆகிய கிராமங்களில் தலா ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, கசவனம்பட்டியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.