The Hon’ble Rural Development minister-Ungaludan Stalin -Kuttathupatti
செ.வெ.எண்:-35/2025
நாள்: 08.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், குட்டத்துப்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
குட்டத்துப்பட்டி மற்றும் மைலாப்பூர் ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி ஊராட்சியில் இன்று(08.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், குட்டத்துப்பட்டி மற்றும் மைலாப்பூர் ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நேரில் வந்து மனுக்களை பெறுவதாக கருதும் அளவிற்கு இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு வீடு தேடிச் சென்றடைய வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் 2 இலட்சம் வீடுகளை சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ஒரு இலட்சம் வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள இயலாத அளவிற்கு பழுதடைந்துபோன வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகள் கட்டுவதற்காக மறுகட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கடந்த ஆண்டு 2000 வீடுகள், நடப்பு ஆண்டில் இதுவரை 900 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.5.00 இலட்சத்திற்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். சிகிச்சைக்கு கூடுதலான செலவு ஏற்படுமெனில் அதுகுறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனு அனுப்பி வைத்தால் ரூ.30 இலட்சம் வரை சிகிச்சைக்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம். எனவே, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். அதற்கான தொகையினை அரசு வழங்கும். விலைமதிப்பில்லா உயிர்களை பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார்.
அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
மேலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், குட்டத்துப்பட்டி மற்றும் மைலாப்பூர் ஆகிய கிராமங்களில் தலா ரூ.13.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.