Close

The Hon’ble Rural Development minister – Ungaludan Stalin – Reddiyarchadram

Publish Date : 10/09/2025
.

செ.வெ.எண்:-29/2025

நாள்: 09.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பித்தளைப்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பித்தளைப்பட்டி ஊராட்சிகளில் இன்று(09.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இன்றைய தினம் புதுச்சத்திரம், பித்தளப்பட்டி, வக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தற்போது நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

60 வயது கடந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கச் செய்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார்.வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்.

இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“உங்களுடன் ஸ்டாலின்“ திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களும் மாண்புமிகு முதலமைச்சருக்கு பதிலாக அவர்கள் சார்பில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்று அரசுக்கு அனுப்பி வைத்து உடனடியாக தீர்வு காணும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரில் வந்து மனுக்களை பெற்றுக்கொண்டதாகத்தான் அதற்கு அர்த்தம். அந்த அளவிற்கு இம்முகாமிற்கு முக்கியத்துவம் உள்ளது. இங்கு பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிப் பார்வைக்கு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவே, எல்லாருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி உள்ளார்கள்.

அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட இந்த அரசு தயாராக உள்ளது. இது உங்களுடைய அரசு, மக்களின் அரசு, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

இன்றைய தினம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் புதுச்சத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா. 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் பித்தளைப்பட்டி ஊராட்சியில் 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா. 4 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.