The Hon’ble Rural Development – Road and Food and Civil Supply Ministers Inspection-GH – Palani-Oddanchatram-Authur College
செ.வெ.எண்:-23/2024
நாள்:-09.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர்
பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை புதிய கட்டுமான பணிகள், ஆத்துார் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி புதிய கட்டடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டடங்கள், ஆத்துார் வட்டம், சீவல்சரகு கிராமத்தில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டுமானப் பணிகளை இன்று(09.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு கூடுதல் தலைமைச் செயலர் திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள், அரசு செயலர்(நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) மரு.ஆர்.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், மதுரை(வடக்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆய்வின்போது, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவமனைகளில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுப்பணியின் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியில் கலைக்கல்லூரி, பழனியில் மாவட்ட மருத்துவமனை, ஒட்டன்சத்திரத்தில் தாலுகா மருத்துவமனை, கொடைக்கானலில் மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
பழனி ஆன்மீக தலமாக இருக்கிறது. பழனியில் தாலுகா மருத்துவமனைதான் இருந்தது. இம்மருத்துவமனையினை தரம் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ரூ.70 கோடி மதிப்பீட்டில் நிதி மற்றும் 6.80 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டு, 1,81,000 சதுர அடியில் கட்டடம் கட்டப்படுகிறது. பழனியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவு, மகப்பேரியியல் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரேத பரிசோதனைக் கூடம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவு கட்டத்தில் தரைதளத்தில் புறநோயாளிகளுக்கான ஆலோசனை அறைகள், உடலியக்க மருத்துவம், உறைவிட மருத்துவர் அறை, மருந்தகம், முதல் தளத்தில் பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை பகுதி, குழந்தைகள் மருத்துவ பகுதி, இரண்டாம் தளத்தில் ஆண்கள் மருத்துவ பகுதி, மூன்றாவது தளத்தில் பெண்கள் மருத்துவ பகுதி, நான்காவது தளத்தில் எலும்பியல் பகுதி, மனநோயாளிகள் பகுதி, குழந்தை மருத்துவ பகுதி, ஐந்தாவது தளத்தில் சிறப்பு சிகிச்சை, ஆறாவது தளத்தில் கூட்ட அரங்கம், சிற்றுண்டி கூடம், நுாலகம் மற்றும் அனைத்து தளங்களிலும் மருத்துவர் மற்றும் செவிலியர் அறைகள் அமைக்கப்படுகின்றன.
மகப்பேரியியல் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு 5 தளங்களுடன் அனைத்து மருத்துவ வசதிகளுடனும், 2 மருத்துவ சிகிச்சை பகுதி கட்டடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கட்டடம் முழுவதும் ஆக்சிஜன் குழாய் வசதி மற்றும் தீயணைப்பு வசதிகள், கழிப்பறைகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தரைதளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர விபத்து சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, இ.சி.ஜி. எக்கோ போன்ற வசதிகளும், முதல் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, தாய் சேய் நலப்பிரிவு, இரண்டாவது தளத்தில் அறுவை அரங்கம், அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பகுதி(ஆண்கள்), மூன்றாவது தளத்தில் அளுவை அரங்கம்(எலும்பியல்), அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பகுதி(பெண்கள்), நான்காவது தளத்தில் நிருவாகப் பிரிவு, இரத்த சேமிப்பு வங்கி, ஆய்வகம் ஆகிய வசதிகளும் மற்றும் கட்டடம் முழுவதும் தீயணைப்பு கருவிகள், ஆக்சிஜன் குழாய் வசதி, குடிநீர் வசதிக்காக கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பிரேத பரிசோதனைக்கூடம், குளிரூட்டப்பட்ட பெட்டி, காவலர் அறை, உபகரணங்கள் அறை, கழிப்பறை வசதிகளுடன் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆத்துார் வட்டம், சீவல்சரகு கிராமத்தில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் ரூ.75.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணி 24.02.2023 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரண்டு தளங்கள் கொண்ட கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் 15940 சதுர மீட்டர் பரப்பளவில் வடிவமைக்கபட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தரைதளத்தில் மாணவ, மாணவிகளுக்கான 29 வகுப்பறைகள், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் ஆய்வகம், நிர்வாகப்பிரிவு, நுாலகம், 600 இருக்கை வசதிகள் கொண்ட குளிருட்டப்பட்ட கலைரங்கம், திறந்தவெளி கலைரங்கம் ஆகியவையும், முதல் தளத்தில் மாணவ, மாணவிகளுக்கான 31 வகுப்பறைகள், இயற்பியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் ஆய்வகம், நிர்வாகப்பிரிவு, நுாலகம், குடிநீர் வசதிக்காக கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தொட்டிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், கட்டடம் முழுவதும் தீயணைப்பு கருவிகள் ஆகிய வசதிகளுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகள் முழுமையாக 31.12.2024-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கல்லூரிகள் இருந்த போதிலும், இன்றைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்கல்லூரி அமைக்க வேண்டுமென்று பொதுப்பணித்துறையின் சார்பில் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு,கா.பொன்ராஜ். முதன்மை தலைமைப் பொறியாளர்(மதுரை மண்டலம்) திரு.செல்வராஜன், கண்காணிப்புப் பொறியாளர் (மதுரை மண்டலம்) திரு.அய்யாக்கண்ணு, செயற்பொறியாளர் திரு.தங்கவேல், இணை இயக்குநர்(சுகாதார நலப்பணிகள்) மரு.இரா.பூமிநாதன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர், திரு.கோ.காந்திநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திருமதி சுபாஷினி, பழனி நகர்மன்ற தலைவர் திருமதி உமாமகேஸ்வரி, துணைத்தலைவர் திரு.கந்தசாமி, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திரு.க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மருத்துப் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.