The Hon’ble Social Welfare minister-ICDS
செ.வெ.எண்:-90/2025
நாள்:-24.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள், திண்டுக்கல்லில் பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்கவும், தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்கவும், குறிப்பாக தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாமை இன்று(24.06.2025) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்கவும், குறிப்பாக தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடத்தப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்ச்சியடைய பழம், காய்கறிகள், கீரை வகைகள், நிலக்கடலை போன்ற சத்தான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பின்னர் நம்முடைய சந்ததியை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளர்க்க வேண்டியது நமது பொறுப்பாகும். குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், அதன்பின்னர் 2 வயது வரை சத்தான உணவு வகைகளை கொடுக்க வேண்டும். குழந்தை பருவத்தில் 2 வயது வரை மூளை வளர்ச்சி 60 சதவீதம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கும்போது, நமது குழந்தைகள் ஆரோக்கியமான, அறிவார்ந்த குழந்தைகளாக உருவாகின்றனர். அதேபோல் பாலுாட்டும் போதும், தாய்மார்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
கர்ப்பிணிகள், தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் ஆகியோரின் ஆரோக்கியம், பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் வழங்கப்படும் தகவல்களை நன்கு அறிந்து, நல்ல முறையில் பின்பற்ற, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட சமூக நல அலுவலர்(பொறுப்பு) திருமதி பெ.விஜயராணி, துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.