Thirukural Photo Exhibition – Central Library
செ.வெ.எண்:-60/2024
நாள்:-23.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டு வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் புகைப்படக் கண்காட்சி, திருக்குறள் தொடர்பாக மாணவர்களால் வரையப்பட்ட புகைப்படங்கள், திருக்குறள் விளக்க உரைகள் கண்காட்சி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பார்வைக்கு இன்று(23.12.2024) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
அய்யன் திருவள்ளுவர் அவர்களின் 133 அடி உயர திருவுருவச் சிலை 01.01.2000 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள நிலையில் அதற்கான வெள்ளிவிழாவினைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில், திருவள்ளுவர் புகைப்படக் கண்காட்சி, திருக்குறள் தொடர்பாக மாணவர்களால் வரையப்பட்ட புகைப்படங்கள், திருக்குறள் விளக்க உரைகள் கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி தொடர்ந்து 31.12.2024 வரை நடைபெறவுள்ளது.
மேலும், இன்று(23.12.2024) முதல் 31.12.2024-ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் மற்றும் நூலக வாசகர்களைக் கொண்டு திருக்குறள் கருத்தரங்கம், வினாடி வினா போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சரவணக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.