Thirukural Quiz
செ.வெ.எண்:-45/2024
நாள்: 17.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான ”திருக்குறள்“ வினாடி-வினா முதல்நிலைப் போட்டி தேர்வு 21.12.2024 அன்று திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட நிருவாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான ”திருக்குறள்“ வினாடி-வினா முதல்நிலைப் போட்டி தேர்வு 21.12.2024(சனிக்கிழமை) அன்று திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
தேர்வில் பங்குபெறும் போட்டியாளர்கள் அனைவரும் அலுவலகத்தில் பணிபுரிவதற்கான அடையாள அட்டை கொண்டு வருபவர்கள் மட்டுமே தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், போட்டியாளர்கள் அனைவரும் 21.12.2024 அன்று பிற்பகல் 1.00 மணியளவில் வருகை புரிந்திருக்க வேண்டும். தேர்வின்போது கைப்பேசி, ஸ்மார்ட்வாட்ச், புளுடூத்(Bluetooth) ஆகிய உபகரணங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. மேற்படி தேர்வுகொள்குறி வகை (Objective Type Test) முறையில் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள்,அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி, பட்டயக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆகியோர் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். திண்டுக்கல் மாவட்ட போட்டியாளர்கள் பெயர் முன்பதிவிற்கு 8248172944 மற்றும் 7094293103 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதிபெறும் 3 குழுக்கள் (ஒரு குழுவிற்கு தலா 3 நபர்கள் வீதம் மொத்தம் நபர்கள்) தேர்வு செய்யப்பட்டு 28.12.2024 அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். விருதுநகர் மாவட்டத்தில் 28.12.2024 அன்று நடைபெறும் இறுதிப் போட்டித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.50 இலட்சம், மூன்றாம் பரிசு ரூ.1.00 இலட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மேலும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற இதர மூன்று குழுக்களுக்கு ஊக்கப்பரிசாக தலா ரூ.25,000 வழங்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.