Close

Thoppampatti Samathuvapuram

Publish Date : 24/06/2025

செ.வெ.எண்:-87/2025

நாள்:-24.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொழுமங்கொண்டான் புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கட்டப்பட்டு வரும் 100 புதிய வீடுகளுக்கு புதிய பயனாளிகள் தேர்வுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொழுமங்கொண்டான் கிராம ஊராட்சியில், 2023-24-ஆம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கட்டப்பட்டு வரும் 100 புதிய வீடுகளுக்கு 100 புதிய பயனாளிகள் தேர்வு குழு உறுப்பினர்கள் மூலம் ஆதிதிராவிடர் – 40 பயனாளிகள், பிற்படுத்தப்பட்டோர் – 25 பயனாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 25 பயனாளிகள், மற்றவர்கள் – 10 பயனாளிகள் ஆகிய பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.

புதிய சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு பெற விரும்பும் மேற்குறிப்பிட்ட வகுப்புகளைச் சார்ந்த கொழுமங்கொண்டான் ஊராட்சியில் நிரந்தரமாக வசித்து வரும் மிகவும் வறிய நிலையில் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை எழுத்து மூலமாக தற்போது குடியிருக்கும் முகவரியினை தெளிவாக குறிப்பிட்டும், சாதிசான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் 08.07.2025 மாலை 5.00 மணிக்குள் தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) அவர்களிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகளில், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மகளிரை தலைமையாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் இராணுவத்தினர், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், ஹெச்.ஐ.வி, எய்ட்ஸ், காசநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வெள்ளம் மற்றும் தீ போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, அதற்கான சான்றினை இணைக்க வேண்டும்.

ஏற்கனவே சிமெண்ட் கான்கிரீட் கூரைவீடு உள்ளவர்கள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், மீனவர் இலவச வீட்டுத்திட்டம், கலைஞர் வீட்டு வசதித்திட்டம், பசுமை வீடுகள் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மலைவாழ் மக்களுக்கான வீடுகள் கட்டும் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் வீடு ஒதுக்கீடு பெற்று பயன்பெற்றவர்கள் சமத்துவபுரம் வீடு பெற தகுதியில்லை. பயனாளிகளை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

எனவே, தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.