TN Assembly Public Accounts Committee -Inspection
செ.வெ.எண்:-16/2025
நாள்: 06.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர்(2024-2025), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை இன்று(06.03.2025) நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.பெ.செந்தில்குமார், போளுர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.சந்திரன், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்புச் செயலாளர் திரு.ஜெ.பாலசீனிவாசன் மற்றும் தலைமைச் செயலக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர் இன்று(06.03.2025) பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை | வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, பழனி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில்(2022-23), காந்தி தினசரி சந்தையில் மேம்பாட்டுப் பணிக்கு ரூ.11.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் திட்ட நிதி ரூ.5.66 கோடி மற்றும் நகராட்சி பங்குத்தொகை ரூ.5.66 கோடி என ரூ.11.32 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகனம் நிறுத்துமிடம் மற்றும் மொத்தமுள்ள 150 கடைகளுக்கான மேற்கூரை பணிகள் முடிக்கப்பட்டு ரூ4.73 கோடியில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பூச்சுப்பணிகள் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை வரும் மே மாதத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில்(2022-23) பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, 05.01.2024 அன்று மாண்பமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 200 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். மாணவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த மையத்தில் காணொலிக்காட்சித் திறை (Interactive Flat Panel Display), பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா, கணினி வசதிகள் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தவும், பாதுகாப்பு கருதி சுற்றுசுவர் மற்றும் முன்புறம் கதவு ரூ. 20.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கவும், மேலும் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு சிமெண்ட் கான்கிரிட் தளம் ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கவும், மாணவர்களுக்கு கழிப்பறை வசதிகள் மற்றும் மின்சார வசதிகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் செயல்பாடுகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்
தொடர்ந்து ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வீரலப்பட்டியில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உப்பிலியப்பட்டியில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் உப்பிலியப்பட்டி, 16-புதூர் ரோடு, ஒட்டன்சத்திரம் சாலை விரிவாக்கப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து, பழனி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) திரு.இரா.சக்திவேல், பழனி நகராட்சி ஆணையாளர் திரு.சத்தியநாதன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.