Close

TN – REGINET – Guidelines – Notification

Publish Date : 02/07/2024
.

செ.வெ.எண்:-59/2024

நாள்:-26.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

நிலங்களின் மறுசீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு செயல்படுத்துதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நிலங்களின் மறுசீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு செயல்படுத்துதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.06.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

நிலங்களின் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47AA-ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)-ன் படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024-ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு, இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது.

இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், “மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் மாவட்டம்“ என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பொதுமக்கள் தெரிவிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி பொதுமக்களிடம் கருத்துருக்கள் பெறப்பட்டு, அதன்படி மறுசீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படவுள்ளது.

இதில் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய நகராட்சி பகுதிகளில் உள்ள சொத்துக்கள் மீது ஏற்கனவே உள்ள மதிப்பீட்டில் 10 சதவீதம் கூடுதலாக மதிப்பீடு சீரமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி மதிப்பீட்டின் அடிப்படையில் சந்தை மதிப்பு வழிகாட்டி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சந்தை மதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்டப் பதிவாளர் திரு.சின்ராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.