TNSRLM-Buyer-Seller Meet
செ.வெ.எண்:-64/2023
நாள்: 24.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டம் திண்டுக்கல் பார்சன்ஸ் ஹோட்டலில் 25.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக மொத்தக் கொள்முதலாளர்களிடம் விற்பனை செய்ய ஏதுவாக மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டம் (Buyer, Seller Meet) திண்டுக்கல் பார்சன்ஸ் ஹோட்டலில் 25.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களான கைவினைப் பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், நைட்டிகள், சுடிதார்கள், தரக்கோட்டா மண் பொம்மைகள், கார்த்திகை தீபம், அகல் விளக்கு, கொடைக்கானல் பூண்டு, சிறுமலை மிளகு, தாண்டிக்குடி ஏலக்காய், மிளகு, காபி, கொடைக்கானல் சாக்லெட், மென்பொம்மைகள், மிதியடிகள், சணல் பைகள், பைல்கள், சத்துமாவு, உணவுப் பொருட்கள், ஆர்கனிக் சோப், மளிகைப் பொருட்கள், பினாயில், கவரிங் நகைகள், நத்தம் புளி மற்றும் மலைதேன் உட்பட அனைத்து பொருட்களையும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, திண்டுக்கல் பார்சன்ஸ் ஹோட்டலில் 25.03.2025 அன்று காலை 10.30 முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெறும் மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டத்தில், நுகர்வோர், கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், மொத்த கொள்முதலாளர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.