Close

TNSRLM-Buyer-Seller Meeting

Publish Date : 26/03/2025

செ.வெ.எண்:-67/2025

நாள்: 25.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டம்(Buyer, Seller Meet) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் பார்சன்ஸ் ஹோட்டலில் இன்று(25.03.2025) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில்-9,823, நகர்ப்புற பகுதிகளில்-4,127 என ஆக மொத்தம் 13,950 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மகளிர் திட்டம் சார்பில் மதி அங்காடி, கட்டாய கண்காட்சி, விருப்பக் கண்காட்சி, இயற்கை சந்தை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.

அதன்படி திண்டுக்கல்லில் மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களான கைவினைப் பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், நைட்டிகள், சுடிதார்கள், தரக்கோட்டா மண் பொம்மைகள், கார்த்திகை தீபம், அகல் விளக்கு, கொடைக்கானல் பூண்டு, சிறுமலை மிளகு, தாண்டிக்குடி ஏலக்காய், மிளகு, காபி, கொடைக்கானல் சாக்லெட், மென்பொம்மைகள், மிதியடிகள், சணல் பைகள், பைல்கள், சத்துமாவு, உணவுப் பொருட்கள், ஆர்கனிக் சோப், மளிகைப் பொருட்கள், பினாயில், கவரிங் நகைகள், நத்தம் புளி மற்றும் மலைதேன் உட்பட அனைத்து பொருட்களையும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் இருந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொருட்கள் வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். இதில் காய்கறிகள் உற்பத்தி செய்யும் சுய உதவிக்குழு உறுப்பினர்களும், கைவினை பொருட்களும், எண்ணெய், சோப்பு, உணவு பண்டங்கள், தேன் மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் ஆகிய அனைத்து உற்பத்தியாளர்களும் தங்கள் பொருட்களுக்கான விற்பனை ஒப்பந்தங்களை மேற்கொண்டன. இங்கு 107 நிறுவனங்கள் கலந்துகொண்டு ஒப்பந்த உடன்படிக்கைகள் மேற்கொண்டன. இந்நிகழ்ச்சியில் சுமார் ரூ.2.5 கோடி அளவிலான வணிக ஒப்பந்தங்கள் நடைபெற்றுள்ளன.

மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்து, வணிகம் செய்ய ஒப்பந்த உடன்படிக்கை மேற்கொண்ட வணிக நிறுவனங்களுக்கு, அதற்கான ஒப்பந்த உடன்படிக்கை ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர் மேம்பாட்டுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் என்றாலே தரமானதாகவும், நம்பகத்தன்மையுடன் இருக்கும். அப்படிப்பட்ட தரமான பொருட்களை சந்தைப்படுத்துவதில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்ற வகையில் புதிய பரிணாமவளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருட்களை நம்பத்தன்மையுடன் எளிதாக கொண்டுபோய் சேர்த்தால்தான் தொழில் மேம்படும்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தங்களது உற்பத்தி பொருட்களை வெகு நேர்த்தியாக, அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்திப் பொருட்களை ஒப்பந்தம் செய்து, கொள்முதல் செய்து சந்தைப்படுத்திட உள்ளனர். இதன்மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு சிறந்த சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லை பொருத்தவரை, கொடைக்கானல் பூண்டு, சிறுமலை வாழைப்பழம், சின்னாளப்பட்டி சேலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மேலும், முருங்கை, ஆயக்குடி கொய்யா போன்ற பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, மகளிர் சுயஉதவிக்குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களின் சிறப்பை வெளிக்காட்ட பிராண்ட் மிகவும் முக்கியம். அதற்காக அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்படுத்தித் தரப்படும் இதுபோன்ற சந்தை வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திருமதி சுபாஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.