Close

TNSRLM – College bazaar-Magalir thittam

Publish Date : 12/12/2024
.

செ.வெ.எண்:-30/2024

நாள்:-11.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

களைகட்டியது கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி 3 ஆண்டுகளில் 438 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.28.02 இலட்சம் மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் விற்பனை.

சந்தை வாய்ப்பு கிடைத்ததால் பயனடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது, மகளிர் சுயஉதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கூட்டாக இணைந்து சுயதொழில் புரிவதற்காக மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மானியக் கடனுதவி உட்பட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகிறது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்களின் முன்னெற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள “விடியல் பயணத் திட்டம்“, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்“, உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்“, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், தொழில் பயிற்சிகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தொழில் தொடங்கிட கடனுதவிகள், தொழிலை மேம்படுத்தில் தொழிற்பயிற்சிகள் அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பல்வேறு தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்திட வழிவகை ஏற்படுத்தும் வகையில் சந்தை வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது, ஊரகப் பகுதியில் 9,688 குழுக்களும், நகர்ப்புற பகுதியில் 4,192 குழுக்களும் என மொத்தம் 13,880 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன, அதில் 1,55,780 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2021-22 முதல் 30.11.2024 வரை பல்வேறு திட்டங்களின் கீழ், ஊரக பகுதி மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.3,336.95 கோடி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.668.09 கோடி என மொத்தம் ரூ.4,005.04 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதலுக்கு வழிவகை ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுக்கு 5 விற்பனை சந்தைகள் நடத்தப்படுகின்றன. அதற்காக கல்லுாரிகளில் கல்லுாரி சந்தை விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டு 5 கல்லுாரிகளில் நடத்தப்பட்ட கல்லுாரி சந்தை விற்பனைக் கண்காட்சியில் 189 மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்துகொண்டு ரூ.10.29 இலட்சம் மதிப்பிலான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தனர். 2023-24-ஆம் ஆண்டு 5 கல்லுாரிகளில் நடத்தப்பட்ட கல்லுாரி சந்தை விற்பனைக் கண்காட்சியில் 109 மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்துகொண்டு ரூ.4.77 இலட்சம் மதிப்பிலான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தனர். 2024-25-ஆம் ஆண்டு இதுவரை 4 கல்லுாரிகளில் நடத்தப்பட்ட கல்லுாரி சந்தை விற்பனைக் கண்காட்சியில் 140 மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்துகொண்டு ரூ.12.95 இலட்சம் மதிப்பிலான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தனர். இதுவரை நடைபெற்ற 14 கண்காட்சிகள் வாயிலாக 438 மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்துகொண்டு ரூ.28.02 இலட்சம் மதிப்பீட்டிலான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

தற்போது, 5வது கல்லுாரி சந்தை விற்பனை கண்காட்சி திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று(11.12.2024) தொடங்கி 13.12.2024 வரை நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 20 மகளிர் சுய உதவிக்குழுக்களும், வெளிமாவட்டங்களிலிருந்து 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களும் என மொத்தம் 30 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களான பேன்சி ரகங்கள், கைவினைப் பொருட்கள், சின்னாளப்பட்டி சேலைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொம்மைகள், கவரிங் நகைகள், போர்வைகள், பெட்சீட், தலையணை உரைகள், மூலிகை சோப்பு போன்ற பொருட்களை விற்பனைக்காக அரங்குகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

கல்லுாரி சந்தை விற்பனைக் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தியுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் தெரிவித்ததாவது:-

கிராமப்புறத்தில் வசித்து வரும் நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில், குடும்ப வருமானத்தை மேம்படுத்த பெரிதும் சிரமப்பட்டு வந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு கடனுதவி பெற்றுத் தருவது குறித்து அறிந்தோம். இதன் வாயிலாக எங்கள் கிராமத்தில் ஏழ்மையிலுள்ள ஒரே பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு சுய உதவிக்குழு அமைத்து, சுய தொழில் தொடங்கிட கடன் வசதி பெற்று, தொழில் நடத்தி வருகிறோம்.

மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு சார்பில் இதுபோன்ற கல்லுாரி சந்தை விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இங்குள்ள அரங்குகளில் எங்கள் பொருட்களை விற்பனை செய்ய வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் என்றால் தரமானதாக இருக்கும் என்பதால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மேலும், எங்களது உற்பத்தி பொருட்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும், தொழில் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலமாக எங்களது உற்பத்தி பொருட்கள் அதிகளவு பிற்பனை செய்யப்படுவதுடன், எங்களுக்கு வருமானம் அதிகரிக்கிறது. தமிழ்நாடு அரசின் இதுபோன்ற திட்டங்களினால் மகளிரின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. மேலும் எங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் குடும்பம் முன்னேற்றம் அடைந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம், என தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்லுாரி மாணவிகள் தெரிவித்ததாவது, ”கல்லுாரி சந்தை விற்பனைக் கண்காட்சியில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்கள் என்பதால் மாணவிகளை கவரும் வகையில் அழகான டிசைன்களில் அழகு சாதன பொருட்கள் உள்ளன. பேன்சி ரகங்கள், ஆரோக்கியத்தை தரும் மூலிகை சோப்பு, அழகு சாதன பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தெரிவித்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.