TNSRLM-Exhibition
செ.வெ.எண்:-64/2025
நாள்:-20.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
சென்னையில் 24.05.2025 முதல் 03.06.2025 வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான கோடை கொண்டாட்டம் விற்பனை கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம், நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தக்கூடிய பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோடை கொண்டாட்டம் விற்பனை கண்காட்சி 24.05.2025 முதல் 03.06.2025 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.
இக்கண்காட்சியில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப்பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டு பொருட்கள், பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள் போன்ற பொருட்களும் கோடை காலத்திற்கு தொடர்பான பொருட்கள் மற்றும் சிறிய வகை நினைவு பரிசுகள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் தயாரிக்கும் குழுக்களும் அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகாலத்திற்கு ஏற்றவாறு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கோடை கொண்டாட்டம் விற்பனை கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் https://exhibition.mathibazaar.com/login- என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.