TNSRLM SHG Product mela
செ.வெ.எண்:09/2024
நாள்:-04.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை இணைய வழி சந்தைப்படுத்துவதற்கான பதிவேற்றம் மேளா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக மற்றும் நகர்ப்புற சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை இணைய வழி சந்தைப்படுத்துவதற்கான பதிவேற்றம் மேளா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(04.10.2024) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி, தமிழக முழுவதும் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்களை “மதி” என்னும் அடையாளத்துடன் முறையான, தரமான, முழுமையான தகுதியுள்ள பொருட்களை இணைய வழி (E-Commerce) சந்தைப்படுத்துவதற்கு முன்னெடுப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற சுய உதவிக்குழுக்களின் 20 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 37க்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக இணைய வழி சந்தைப்படுத்துவதற்கான பதிவேற்றம் இன்று(04.10.2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை அமோசன், பிளிப்காட், மிசோ, ஜெம், மதி சந்தை, மைந்ரா, இபே, ஜீயோ மாட் போன்ற இணைய வழி சந்தைப்படுத்துவதற்கான “மதி“ குறியீட்டுடன் பதிவேற்றம் செய்யப்பட்டது. இணையதளம் வாயிலாக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் “மதி“ (மகளிர் திட்டம்) குறியீட்டை பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழுவினரின் பொருட்களை தேர்வு செய்து, கொள்முதல் செய்து மகளிர் வாழ்வாதாரம் மேம்பட ஊக்கப்படுத்திட வேண்டும்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொழில் தொகுப்புகள், உற்பத்தி நிறுவனங்கள் வழியாக உற்பத்தி மற்றும் தயாரிக்கும் பொருட்களை அதிகளவில் பொது வழிகளில் சென்றடைவதற்கு இதன் மூலம் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணைய வழி பதிவு செய்து, தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, உதவித் திட்ட அலுவலர், மாவட்ட வள பயிற்றுநர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.