Close

Tourism Commissioner Inspection

Publish Date : 21/10/2024
.

செ.வெ.எண்:-45/2024

நாள்: 17.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக, சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக, சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.10.2024) பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் அவர்கள் கொடைக்கானல், காமக்காபட்டி சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் பரிசோதனை மற்றும் நெகிழி இல்லா பசுமை கொடைக்கானல், கொடைக்கானல் டோல்கேட், வெள்ளி அருவி, செண்பகனுார், கொடைக்கானல் பேருந்து நிலையம், வட்டக்கானல் பகுதி, பிரையன்ட் பூங்கா ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சிறப்பு மிக்க சுற்றுலாத்தலம். இங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகள், போக்குவரத்து வசதிகள், உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல், சாலையோர ஆக்கிரமிப்புகள், வாகன நிறுத்தும் இடம், இ-பாஸ் நடைமுறை, கொடைக்கானலுக்கு புதிய வழிப்பாதைகள், சென்டர்மீடியன் அமைத்தல், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இ-பாஸ் நடைமுறை குறித்து சுற்றுலாப் பயணிகள் அனைவரது கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மலை அடிவாரத்தில் இ-பாஸ் நடைமுறை குறித்து விளம்பர பலகை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மலையடிவாரத்திலேயே இ-பாஸ் பதிவு மேற்கொள்வதன் மூலம் சோதனைச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறையும்.

கொடைக்கானலுக்கு வருகை தருவதற்காக இ-பாஸ் வேண்டி 5000 பேருந்துகள் பதிவு செய்த நிலையில் 2000 பேருந்துகளும், 21,000 கார்கள் பதிவு செய்திருந்த நிலையில் 9,000 கார்களுமே வருகை தந்துள்ளன. வேறு பல காரணங்களுக்காக அந்த வாகனங்கள் வராமல் இருந்திருக்கலாம். இருந்தபோதிலும், அதுகுறித்த காரணங்களை அறிய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொடைக்கானலில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், போக்குவரத்தை சீரமைக்க ரவுண்டானா அமைத்தல், சிக்னல் அமைத்தல், தங்குமிடம் வசதிகள், குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்துதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 5 அருவிகள் உள்ள இடங்களை சுற்றுலாத்துறை மூலம் மேம்படுத்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அரசு ஆணை கிடைக்கப்பெற்றவுடன் அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

சாகச சுற்றுலாத் தலங்களை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் 13 வகையான சாகச சுற்றுலாத் தலங்கள் அமைக்க திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அனுமதிக்கு பின்னர் இதுதொடர்பான முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும், என சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவராம், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.ப.சத்தியநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், சுற்றுலா அலுவலர் திரு.கோவிந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.