Close

Ungalai Thedi Ungal Ooril -Collector Inspection(Dindigul West)

Publish Date : 22/03/2025
.

செ.வெ.எண்:-51/2025

நாள்:-19.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.03.2025) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர், உணவு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து, திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, மாணவர்களிடம் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும், இடைநின்ற மாணவர்கள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். கற்றல் – கற்பித்தல் உபகரணங்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் காலை உணவு மற்றும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் சுத்தமாக உள்ளதா, கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், காலை உணவுத் திட்டத்தில் உணவுகளை மாணவர்களுக்கு தரமாக, சுகாதாரமானதாக தொடர்ந்து வழங்க வேண்டும், பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், திண்டுக்கல் மாநகராட்சி ஆர்.வி நகர் பகுதியில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ஆய்வு செய்தார். மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துக்களின் இருப்பு மற்றும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். நாய்களை மிகவும் பாதுகாப்பான முறையில் மனிதபிமானத்துடன் பிடிக்கவும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பை முறையாகக் கையாளவும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து மாடுகளை பராமரிக்கப்படும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாடுகளுக்கு வழங்கப்படும் உணவு இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்களின் இருப்பு, வருகை பதிவேடு, அடிப்படை வசதிகள், செய்திதாள், நூல்களின் எண்ணிக்கை, கணினி ஆகிவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவர்களிடம் கலந்துரையாடினார். இணையதள வசதியை மேம்படுத்தவும், அறிவுசார் மையத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்பாட்டில் வைக்க அறிவுறுத்தினார்.

மேலும், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவர்களிடம் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஆத்துப்பட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.6.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடகனாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள், கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.17.30 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கணினி வகுப்பறை கட்டுமான பணிகள், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மந்தை குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.36 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டுமான பணிகள், சீலப்பாடி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் செயல்படும் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், குட்டத்துப்பட்டி ஊராட்சி, பாலம் ராஜக்காபட்டியில் பொது நூலகம் 2023-2024 திட்டத்தின்கீழ் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய நூலகம் கட்டுமான பணிகள், கொத்தப்புள்ளி ஊராட்சி கதிரணம்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளி கட்டிடம் கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள், கொத்தப்புள்ளி ஊராட்சி கதிரணம்பட்டியில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி, மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று(19.03.2025) திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கல்வித்துறை, நூலகத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சார்பில் துறை அலுவலர்களால் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு, அலுவலர்களின் ஆய்வு அறிக்கையை பார்வையிட்டார். தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, பணிகளை நிறைவேற்றி அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். மேலும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டதை உறுதிப்படுத்திட வேண்டும், என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.குருமூர்த்தி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.