Ungali Thedi Ungal OOril
செ.வெ.எண்:-13/2024
நாள்:-06.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
பழனி வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 18.12.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு 11.12.2024 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்.
“உங்களைத்தேடி உங்கள்ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் மற்றுமொரு திட்டமாகும். இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், அப்பகுதியில் அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது ஒன்பதாம் கட்டமாக 18.12.2024 அன்று பழனி வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதை முன்னிட்டு 11.12.2024 அன்று பழனி வட்டத்திலுள்ள பழனி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) தலைமையிலும், நெய்காரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், ஆயக்குடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், தொப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையிலும், பாப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உதவி இயக்குநர்(நில அளவை) தலைமையிலும், கோரிக்கடவு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உதவி ஆணையர்(கலால்) தலைமையிலும், பழனி வட்டத்தில் அந்தந்த உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களிலுள்ள பொதுமக்களிடம் காலை 09.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை மனுக்கள் பெறப்படவுள்ளது. மேலும் 18.12.2024 உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் நாளில் அந்தந்த கிராமங்களுக்கு ஆய்வுக்காக நியமிக்கப்படும் அலுவலரிடமும் மனு அளிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தின் கீழ் மனு அளித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.